பந்துவீச்சில் சொதப்பிய பஞ்சாப்.., டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி..!

டெல்லி அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் எடுத்தனர். 196 ரன்களுடன் டெல்லி அணி களமிறங்கியது.
டெல்லி அணியில் தொடக்க வீரராக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினார். ஆட்டம் தொடக்கத்திலேயே டெல்லி அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பிருத்வி ஷா 17 பந்தில் 32 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனை தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் களம் இறங்கிய வேகத்தில் 9 ரன்னில் வெளியேறினார்.
தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தவான் 92 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதில் 13 பவுண்டரி 2 சிக்சர் அடங்கும். பின்னர், இறங்கிய ரிஷாப் பண்ட் 15 ரன்னில் விக்கெட்டை இழந்தார். இறுதியாக டெல்லி அணி 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
3 போட்டிகளில் விளையாடி டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றியும், 1 போட்டிகளில் தோல்வியையும் தழுவியுள்ளது.