நான் உங்களிடம் பேசவில்லை… கம்பிரிடம் சீறிய கோலி… வாக்குவாதத்தில் நடந்தது இதுதான்.!

எனது வீரரை அவமதிப்பது என் குடும்பத்தில் ஒருவரை அவமதிப்பதற்கு சமம் என கம்பிர், கோலியிடம் கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியின் போது கோலி மற்றும் லக்னோ அணி வீரர்களிடையே சிறு சலலப்பு ஏற்பட்டது, இந்த சலசலப்பில் அவர்கள் பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நேற்று முன்தினம் லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் மோதிய போட்டியின் போது பல்வேறு வாக்குவாதங்கள் நடைபெற்றன.
இதில் பல்வேறு தரப்பிலும் ஆதரவாக ரசிகர்கள், சமூக வலைதளத்தில் கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். போட்டியில் பெங்களூரு அணி, லக்னோ அணியை வெற்றி பெற்றதுடன், போட்டியின் நடுவில் கோலி மற்றும் லக்னோ அணி வீரர் நவீன் உல் ஹக் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து போட்டிக்கு பிறகு இது மீண்டும் தொடர்ந்தது, இம்முறை லக்னோ அணி ஆலோசகர் கம்பிர், மற்றும் கோலிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கோலி மற்றும் மயர்ஸ் பேசிக்கொண்டிருந்த போது, பிரச்சனை ஏற்படக்கூடும் என்று கம்பிர், மயர்ஸை இழுத்து உரையாட வேண்டாம் என்று கூறினார்.
அதைத் தொடர்ந்து நடந்த வாக்குவாதம் களத்தை போர்க்களமாக மாற்றியது என்றே கூறலாம், அருகிலிருந்தவர் கூறிய தகவலின் படி கோலி, கம்பிரிடம் நான் உங்களிடம் எதுவும் சொல்லாத போது நீங்கள் ஏன் நடுவில் வருகிறீர்கள் எனக்கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த கம்பிர் எனது அணியில் ஒருவரை நீங்கள் அவமதிப்பது, என் குடும்பத்தில் ஒருவரை அவமதிப்பதற்கு சமம் எனக்கூறியுள்ளார்.
பின்னர் கோலி, கம்பிரிடம் அப்படியென்றால் உங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூற, இதற்கு கம்பிர் ஆமாம், உங்களிடம் தான் நான் இதைக் கற்றுக்கொள்ள வேண்டும் என பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2013 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போட்டியின் போது, இருவரும் கிட்டத்தட்ட மோதலுக்கு தயாரானார்கள், அதன் பிறகு தற்போது மீண்டும் இருவருக்கும் இடையே இந்த பிரச்சனை தொடங்கியிருக்கிறது.