என்னை பற்றி தெரிஞ்சும் ராஜஸ்தான் செஞ்சது ஆச்சரியம்! மிட்செல் ஸ்டார்க் பேச்சு!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடிய மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளார்.

டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது.அடுத்ததாக களமிறங்கிய ராஜஸ்தான் அணி அதே 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. எனவே, போட்டி சூப்பர் ஓவராக மாறியது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் 11 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஸ்டப்ஸ் 12 ரன்கள் எடுத்து டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வெற்றி பெற செய்தனர்.இந்தப் போட்டியில், வெற்றிபெற்றதற்கு முக்கிய காரணமே வேக வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் அபாரமான பந்துவீச்சு என்று சொல்லலாம். ஏனென்றால், அவர் தனது அனுபவத்தையும் திறமையும் பயன்படுத்தி சூப்பர் ஓவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்தார்.
எனவே, சிறப்பாக பந்துவீசிய அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. போட்டி முடிந்த பிறகு பேசிய டெல்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் “எனது பந்து இடது கை பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் நெருக்கடியை கொடுக்கும். ஏனென்றால், நான் பந்து வீசும் கோணம் இடது கை எனவே, ஒரு இடது கை வீரர் பந்துகளை எதிர்கொள்வதில் கொஞ்சம் சிரமம் படுவார்கள். அப்படி இருக்கையில் சூப்பர் ஓவர் வரை போட்டி வந்திருக்கிறது இருந்தாலும் ராஜஸ்தான் இடது கை பேட்ஸ்மேன்களை அனுப்பியது பெரிய ஆச்சரியமாக இருந்தது.
ஒரு விக்கெட்டை நான் வீழ்த்திய பிறகு வலது கை வீரர்கள் தான் வருவார்கள் என நான் நினைத்தேன். ஆனால், அவர்கள் இடது கை பேட்ஸ்மேனை அனுப்பியதை பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் எனது திட்டத்தை தெளிவாக செயல்படுத்தினேன். சில சமயங்களில் அதிர்ஷ்டமும் உதவுகிறது. ஒரு நோ-பால் தவறு செய்தேன், ஆனால் எங்களுடைய பேட்டிங் அதனை சரி செய்துவிட்டதாக நினைக்கிறேன். சூப்பர் ஓவரில் கே.எல்.ராகுல் மற்றும் ஸ்டப்ஸ் சிறப்பாக விளையாடினார்கள்.
எங்களுடைய அணி தலைவர் அக்சர் படேல் எங்களை சிறப்பாக வழிநடத்தி செல்கிறார். எங்களுடைய அணி வெற்றிக்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.அதைப்போல பந்துவீச்சில், பேட்டிங்கிலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால் நாங்கள் வெற்றிபெற்று சிறப்பாக விளையாடி வருகிறோம். வருகின்ற போட்டிகளிலும் இது போலவே விளையாட முயற்சி செய்வோம்” எனவும் மிட்செல் ஸ்டார்க் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.