இபிஎஸ் பதில் தான் என்னோட பதில்! செய்தியாளர் கேட்ட கேள்விக்கு டென்ஷனான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!
சட்டஒழுங்கு நாட்டில் இப்போது எப்படி இருக்கிறது? கொலை, கொள்ளை, ஜெயின் பறிப்பு என மக்கள் வாழக்கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.

சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த சூழலில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், கூட்டணி ஆட்சியா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கு ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்து பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து அமைச்சர் ஜெய்குமாரும் பேசியிருக்கிறார். சென்னையில் தீரன் சின்னமலை பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்றார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார். முதல் கேள்வியாக கூட்டணி ஆட்சியா என்கிற கேள்வியை கேட்டனர். அதற்கு சற்று கோபத்துடன் பதில் அளித்த ஜெயக்குமார் ” இந்த விஷயங்களுக்கு நேற்றே எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசிவிட்டார்.
எனவே, தினம் தோறும் சட்ட ஒழுங்கு பிரச்சினை..மக்கள் சந்திக்க கூடிய பிரச்சினைகள் குறித்த பல கேள்விகள் இருக்கிறது நீங்கள் அதெல்லாம் பற்றி கேள்வி கேட்க மாட்டிக்கிறீர்கள்.திமுக நேற்று மாநில சுயாட்சி தீர்மானம் கொண்டு வந்தார்கள். 17 வருடம் மத்தியில் ஆட்சியில் இருந்தப்போ எவ்வளவோ விஷயங்களை செய்திருக்கலாம். அதாவது கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டு சென்று மாநில பட்டியலுக்கு திருப்பி கொண்டு வந்திருக்கலாம்.
இது போல எவ்வளவோ விஷயங்களை சொல்லலாம். கட்சத்தீவு, முல்லை பெரியாறு, அதைப்போல காவேரி நதிநீர் இப்படி பல்வேறு விஷயங்களை கோட்டயை விட்டுவிட்டு கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்று மக்களை இன்றைக்கு ஏமாற்றுகிறார்கள். அந்த வகையில் தான் இன்றைக்கு திமுக அந்த தீர்மானத்தையும் கொண்டுவந்திருக்கிறது. சட்டஒழுங்கு நாட்டில் இப்போது எப்படி இருக்கிறது? கொலை, கொள்ளை, ஜெயின் பறிப்பு என மக்கள் வாழக்கூட முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்கள். எனவே, இதனை பற்றிய கேள்விகளை கேளுங்கள் பதில் அளிக்கிறேன். மற்றபடி பாஜகவுடைய நிலைபாடு என்ன என்பதற்கு எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பதில் தந்துவிட்டார். அது தான் என்னுடைய பதிலும்” எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே பேசியது ” அதிமுக – பாஜக கூட்டணி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொன்னாரு. கூட்டணி அரசு என்று அவர் எங்கும் சொல்லவில்லை. எனவே, நீங்களாக ஏதாவது கிளப்பி விடாதீர்கள். விறு விறுப்பான செய்திகள் வேண்டும் என்று இப்படி செய்யாதீர்கள். டெல்லிக்கு பிரதமர் மோடி என்றால் தமிழ்நாட்டுக்கு நான் என்று என்னுடைய பெயரை சொல்லி சொன்னாரு. இதில் இருந்த நீங்கள் புரிந்துகொள்ளலாம். எனவே, இதில் இருந்து அதாவது விஞ்ஞான மூளையை பயன்படுத்தி எடுக்கலாம் என்று பார்க்காதீர்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.