அதிமுக – பாஜக : “கூட்டணி தான் ஆனால் கூட்டணி ஆட்சி இல்லை” – தம்பிதுரை பரபரப்பு விளக்கம்!
தமிழ்நாட்டில் கூட்டணி அரசு இதுவரை வந்ததும் இல்லை. இனி வரப்போவதும் இல்லை என அதிமுக மாநிலங்களவை எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.

சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன. அந்த குரல் தற்போது அதிமுக – பாஜக இடையே அதிக சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. கூட்டணி அறிவித்து சில தினங்கள் கூட ஆகவில்லை. அதற்குள் தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன. அதற்கு பாஜக மழுப்பலான பதிலை அளித்தாலும், அதிமுக, கூட்டணி அரசுக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறி வருகின்றது.
ஏப்ரல் 11இல் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் என்றும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான கூட்டணி. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான NDA கூட்டணி என்றும், 2026இல் தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அதனை அடுத்து தமிழ்நாட்டில் கூட்டணி அரசு அமையுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கு பதில் அளித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணி என்று தான் கூறியிருந்தார். கூட்டணி அரசு என்று அமித்ஷா கூறவில்லை. அதிமுக- பாஜக கூட்டணி தான் ஆட்சி அமைக்கும் என்று தான் அமித்ஷா சொல்கிறார். மத்திய அரசுக்கு பிரதமர் மோடி போல, தமிழகத்திற்கு எனது பெயரை அமித்ஷா குறிப்பிட்டார். எனவே, இதை வேறுமாதிரியாக பார்க்க வேண்டாம் என விளக்கம் அளித்தார்.
இதே கருத்தை இன்று அதிமுக மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை கூறுகையில், ” சுதந்திரத்திற்கு பிறகான தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டது. பெரும்பான்மை கிடைக்கவில்லை. அப்போது, ராமசாமி படையாட்சி கட்சி கூடுதல் சீட் பெற்று இருந்தது. பின்னர் நேரு தலையிட்டு அவர்களை காங்கிரஸ் கட்சியின் இணைத்து ராஜாஜி தலைமையில் காங்கிரஸ் மைனாரிட்டி ஆட்சி அமைத்தது. மற்ற கட்சியினர் காங்கிரஸ் கட்சியோடு சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்கள் காங்கிரஸ் உறுப்பினராகினர். அது கூட்டணி ஆட்சி இல்லை.
அதன் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் காமராஜர் முதலமைச்சராக இருந்த போதும், அறிஞர் அண்ணா முதலமைச்சராக இருந்த போதும், எம்ஜிஆர் ஆட்சியில் இருந்த போதும் கூட்டணி ஆட்சி இல்லை. 2006-ல் திமுக 93 தொகுதிகள் பெற்று பெரும்பான்மை இல்லாதபோது காங்கிரஸ் ஆதரவு அளித்தது. அப்போது ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. கூட்டணி அரசு என்றால் நான் முதலமைச்சராக இருக்க மாட்டேன் என கலைஞர் கூறினார். அதன் பிறகு திமுக ஆட்சியமைக்க ஆதரவு மட்டும் காங்கிரஸ் அளித்தது.
தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி அரசு அமைந்ததில்லை. இனிமேல் வரப்போவதும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் தனித்து தான் ஆட்சி அமைப்பார். இதனை அவர் நேற்றே தெளிவாக சொல்லி இருக்கிறார்.” என அதிமுக எம்பி தம்பிதுரை திட்டவட்டமாக கூறியுள்ளார்.