#ENGvIND: முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 276 ரன்.., கே.எல்.ராகுல் சதம் விளாசல்..!

முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தனர். 3 மணி அளவில் மழை பெய்ததால் டாஸ் தாமதம் ஆனது.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். இந்திய அணி பேட்டிங் செய்து வந்த நிலையில், 18.4 ஓவரில் மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பின்னர், போட்டி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
ரோகித் சர்மா, கே.எல் ராகுல் இருவரும் ஆட்டம் தொடக்கத்தில் நிதானமாக விளையாடினார். ஒருகட்டத்தில் ரோகித் சர்மா ஒருபுறம் அதிரடி காட்ட மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 145 பந்தில் 83 ரன்கள் எடுத்தார். அதில் 11 பவுண்டரி ஒரு சிக்சர் அடங்கும்.
இதைத் தொடர்ந்து களம் கண்ட புஜாரா வந்த வேகத்திலேயே 9 ரன்களுடன் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் இறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, கே.எல்.ராகுலுடன் இணைந்து அணியின் எண்ணிக்கையை உயர்த்த ஆரம்பித்தார். ஒருபுறம் கோலி விளையாடி கொடுக்க மறுபுறம் கே.எல்.ராகுல் நிதானமாக ரன்களை குவித்து வந்தார். சிறப்பாக விளையாடி வந்த கே.எல் ராகுல் 212 பந்தில் சதம் விளாசினார்.
நிதானமாக விளையாடிய கோலி அரைசதம் அடிப்பார் என எதிர்க்கப்பட்ட நிலையில், 42 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வீரராக ரஹானே களமிறங்கினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 90 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 276 ரன்கள் எடுத்தனர். களத்தில் கே.எல் ராகுல் 127*, ரஹானே 1* ரன்களுடன் உள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் தொடக்க வீரராக களம் இறங்கி சதமடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கே.எல்.ராகுல் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.