இந்தியா மற்றும் நெதர்லாந்து இடையேயான பயிற்சி ஆட்டம் கைவிடப்பட்டது!

இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் தொடர் மழையால் கைவிடப்பட்டது. ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நாளை மறுநாள் தொடங்கவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.
அந்தவகையில், இந்தியா – நெதர்லாந்து, இலங்கை – ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆகிய அணிகள் பயிற்சி போட்டியில் இன்று விளையாடும் என அறிவிக்கப்பட்டது. இதில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று நடக்கும் 9வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோத இருந்தன.
இப்போட்டியானது பிற்பகல் 2 மணிக்கு தொடங்க இருந்தது. ஆனால், திருவனந்தபுரம் கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால் போட்டிக்கு தொடங்க டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர் மழையால் இறுதியாக போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஏற்கனவே, கடந்த 30ம் தேதி இந்தியா – இங்கிலாந்து அணிக்கு இடையே நடக்கவிருந்த பயிற்சி ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்றைக்கும் இந்தியா – நெதர்லாந்து போட்டியும் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடக்க போட்டியுடன் தொடரை தொடங்குகிறது.
இப்போட்டியானது வருகிற 8ம் தேதி மதியம் 2 மணிக்கு சென்னையில் நடைபெற உள்ளது. இதனிடையே, இன்றைய மற்ற பயிற்சி போட்டிகளான இலங்கை – ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடி வருகிறது. அதன்படி, குவஹாத்தியில் ஆப்கானிஸ்தான்- இலங்கை அணிகள் விளையாடி வருகிறது. இதுபோன்று, ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பயிற்சி போட்டியில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.