கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இரண்டு பேரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்தியா கோப்பை வென்றவுடன் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்கள். அதனை தொடர்ந்து இந்த வருடம் ரோஹித் சர்மா முதலில் டெஸ்ட் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.
அவரை தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகவிருப்பதாக தகவல்கள் மட்டுமே பரவி வந்த நிலையில், தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியீட்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” 14 வருடங்களுக்கு முன்பு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் நீல உடையை அணிந்தேன்.
இந்த விளையாட்டு என்னை இப்படி இந்த அளவுக்கு மாற்றும் என்று நினைக்கவே இல்லை. இது என்னை சோதித்து, என்னை ஒரு நல்ல வீரனாக உருவாக்கி, வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை கற்றுக்கொடுத்தது. வெள்ளை உடையில் விளையாடுவது ஒரு தனி உணர்வு. அமைதியாக உழைப்பது, நீண்ட நேரம் மைதானத்தில் இருப்பது, யாரும் கவனிக்காத சிறு தருணங்கள் முதல்கொண்டு இவை எல்லாம் மறக்கவே முடியாது.
இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுவது கஷ்டமாக இருந்தாலும், இது சரியான முடிவு என்று தோன்றுகிறது. நான் இதற்கு என் முழு முயற்சியையும் கொடுத்தேன். இந்த விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்தது. விளையாட்டுக்கு, என்னுடன் விளையாடியவர்களுக்கு, என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. என் டெஸ்ட் வாழ்க்கையை எப்போதும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்வேன்” எனவும் வருத்தத்துடன் தன்னுடைய டெஸ்ட் போட்டியின் ஓய்வை அறிவித்திருக்கிறார். மேலும் இதுவரை விராட் கோலி 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி 9230 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரை சதங்களும் அடங்கும்.
View this post on Instagram