ஃபிஃபா கிளப் உலகக் கோப்பையில் ரொனால்டோ? ஸ்கெட்ச் போடும் முக்கிய அணிகள்!
கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கிளப் உலகக் கோப்பையில் ஒரு அணிக்காக விளையாட வாய்ப்பு இருக்கிறது அதற்கான பேச்சுவார்த்தை போய் கொண்டு இருப்பதாக (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா : பிஃபா (FIFA) தலைவர் ஜியானி இன்ஃபன்டினோ, கிறிஸ்டியானோ ரொனால்டோ அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை (FIFA Club World Cup) தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது ரசிகர்களுக்கு மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு எதிர்பார்ப்பையும் கிளப்பியுள்ளது.
இந்தத் உலகக் கோப்பை (FIFA Club World Cup) தொடர் வருகின்ற ஜூன் 14 முதல் தொடங்க உள்ளது, இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் பங்கேற்கின்றன. இருப்பினும், ரொனால்டோ தற்போது விளையாடும் சவுதி அரேபியாவின் அல்-நாஸ்ர் அணி இந்தத் தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆனாலும், இன்ஃபன்டினோவின் கருத்துப்படி, ரொனால்டோ மற்றொரு அணியுடன் இணைந்து இந்தத் தொடரில் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
பிரபல யூடியூபர் மற்றும் ஸ்ட்ரீமரான IShowSpeed-இன் நேரலை ஒளிபரப்பில் பேசிய இன்ஃபன்டினோ, “ரொனால்டோவின் போட்டியாளரான லயனல் மெஸ்ஸி, இன்டர் மியாமி அணிக்காக தொடரின் முதல் போட்டியில் (ஜூன் 14) விளையாடுவார். மேலும், “கிறிஸ்டியானோ ரொனால்டோவும் கிளப் உலகக் கோப்பையில் ஒரு அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளது. இது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது அல்-நாஸ்ர் என்ற சவுதி அரேபியாவைச் சேர்ந்த கால்பந்து அணிக்காக விளையாடுகிறார். ஆனால், கிளப் உலகக் கோப்பை தொடரில் அல்-நாஸ்ர் அணி தகுதி பெறவில்லை. எனவே, இன்னும் அவர் எந்த அணிக்காக விளையாடப்போகிறார் என்பதற்கான உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகவில்லை என்ற காரணத்தால் வதந்தியாக சில தகவல்கள் பரவி வருகிறது.
உதாரணமாக, சவுதி அரேபியாவின் அல்-ஹிலால், பிரேசில் அணியான பால்மீராஸ், மற்றும் மொராக்கோவின் வைடாட் காசாபிளாங்கா ஆகிய அணிகள் ரொனால்டோவை தங்களுடைய அணியில் விளையாட வைக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது. ஆனால், வைடாட் காசாபிளாங்கா அணி மீது பிஃபா விதித்த தடையால் அவர்கள் புதிய வீரர்களைப் பதிவு செய்ய முடியாது, இது ரொனால்டோ அந்த அணியில் சேருவதற்கு தடையாக உள்ளது.
அதே சமயம், ஸ்பெயினின் மார்கா என்ற செய்தித்தாள், ஒரு பிரேசிலிய அணி ரொனால்டோவுக்கு ஒரு வாய்ப்பு (ஆஃபர்) கொடுத்ததாகக் கூறியது. ஆனால், ரொனால்டோவின் தரப்பு “அவர் தற்காலிகமாக வேறு அணிக்கு மாறுவதற்கு எந்தத் திட்டமும் இல்லை” என திட்டவட்டமாக தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. எனவே, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிளப் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து இன்னும் உறுதியான தகவல் இல்லை.
ஆனால், இன்ஃபன்டினோ இப்படி பேசியிருப்பது ஒரு வேலை அவர் விளையாடப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, ரொனால்டோவின் அடுத்தகட்ட முடிவு குறித்து உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.