செஸ் உலக கோப்பையில் வரலாறு படைத்த இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி.!
ஜார்ஜியாவில் நடக்கும் மகளிர் செஸ் உலகக் கோப்பை போட்டியில் காலிறுதி சுற்றில் சீன வீராங்கனையை வீழ்த்தினார் இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பி.

ஜார்ஜியா : இந்திய செஸ் வீராங்கனை கோனேரு ஹம்பி இந்த ஆண்டு FIDE மகளிர் செஸ் உலகக் கோப்பையில் வரலாறு படைத்துள்ளார். ஜார்ஜியாவின் பாட்டுமியில் நடைபெற்ற இந்தத் தொடரில், காலிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை சாங் யுக்ஸின் (Song Yuxin) என்பவரை 1.5-0.5 என்ற கணக்கில் வீழ்த்தி இந்த மைல்கல் சாதனையை படைத்தார்.
முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது ஆட்டத்தில் டிரா செய்ததன் மூலம் அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம், ஆந்திராவைச் சேர்ந்த கோனேரு ஹம்பி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த உலகக் கோப்பையில், இந்தியாவின் மற்றொரு அரையிறுதி வீராங்கனையாக திவ்யா தேஷ்முக் அல்லது ஹரிகா துரோணவல்லி ஆகியோரில் ஒருவர் இணைய உள்ளனர். ஏனெனில் இவர்கள் இருவரும் காலிறுதியில் ஒருவரை ஒருவர் எதிர்கொண்டு டிரா செய்ததால், டைபிரேக்கர் மூலம் முடிவு தீர்மானிக்கப்படும்.
இதனால், இந்தியாவுக்கு இரண்டு அரையிறுதி இடங்கள் உறுதியாகியுள்ளன. கோனேரு ஹம்பியின் இந்த சாதனை, இந்திய செஸ்ஸின் உலகளாவிய ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதோடு, மகளிர் செஸ்ஸில் இந்தியாவின் வளர்ந்து வரும் திறமையை உறுதிப்படுத்துகிறது.
கோனேரு ஹம்பி, 15 வயது 1 மாதம் 27 நாட்களில், 2002 ஆம் ஆண்டு கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று, அப்போது உலகின் இளைய பெண் கிராண்ட்மாஸ்டராகப் பதிவு செய்தவர். மேலும், 2019 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளில் மகளிர் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை இருமுறை வென்றவர். இவரது இந்த சாதனை, இந்திய செஸ் உலகில் ஒரு பொற்காலத்தை உருவாக்கியுள்ளது மற்றும் இளம் வீரர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது.