INDvsSA: 2-வது டெஸ்ட் போட்டி இன்று! இந்திய அணியில் இரண்டு மாற்றங்கள்?
தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி செஞ்சுரியனில் இருக்கும் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.
அந்த முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸில் தென்னாபிரிக்கா அணி அனைத்து விக்கெட்டை இழந்து 408 ரன்கள் எடுத்து 163 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
அதன்பின், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழந்து 131 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ரோஹித் சர்மாவுக்கு பிறகு யார் கேப்டன்? கேள்வி எழுப்பிய இர்பான் பதான்!
இந்த நிலையில், முதல் போட்டியை தொடர்ந்து இன்று இரண்டாவது போட்டி கேப் டவுன்-ல் இருக்கும் நியூலேண்ட்ஸ் கிரிக்கெட் மைதானதில் நடைபெறவுள்ளது. போட்டியில் விளையாட விராட்கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார்கள். கடந்த முதல் போட்டியில் விளையாடாமல் இருந்த ஜடேஜா இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
அப்படி ஜடேஜா அணிக்கு திரும்பினாள் எந்த வீரருக்கு பதிலாக வருவார் என்பதனை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். அதைப்போல கடந்த முதல் டெஸ்ட் போட்டியில் சரியாக விளையாடாததாக பிரசித் கிருஷ்ணா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் அவர் விளையாடமாட்டார் எனவும், அவருக்கு பதிலாக ஆவேஷ்கானுக்கு அணியில் இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.