,

வங்கதேசத்தில் 5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா..!

By

நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் மொத்தம் 350 நாடாளுமன்றத் தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கு அரசால் பெண் எம்.பி.க்கள் நியமிக்கப்படுவர். இதனால் மீதமுள்ள 300 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற இருந்த நிலையில் ஒரு வேட்பாளர் உயிரிழந்ததால் மீதமுள்ள 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அந்த ஒரு தொகுதிக்கான வாக்குப்பதிவு பின்னர் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நேற்று காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. மொத்தம் 42,000 க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகளில் மக்கள் வாக்கு செலுத்தினர். தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணிக்கை உடனடியாக தொடங்கியது.  வங்கதேசத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்தது. ஆனால் வங்கதேசத்தின் 12-வது பொதுத்தேர்தலில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு குறைவான வாக்குகள் மட்டுமே பதிவாகின. இந்த முறை பொதுத்தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. இதனால்  40 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியது.

நியாயமான முறையில் தேர்தலை நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும். அதன் தலைமையில் தேர்தல் நடைபெற வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியது. அதிலும் பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாத கட்சி நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. பின்னர் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்தது. இந்த தேர்தலில் பிரதமரும், அவாமி லீக் கட்சி தலைவர் ஷேக் ஹசீனா மீண்டும் வெற்றி பெற்றார்.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில், அவரது கட்சியான அவாமி லீக் கட்சி 300 நாடாளுமன்றத் தொகுதிகளில் 224 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால் ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமராகிறார். ஷேக் ஹசீனா கடந்த 2009 முதல் பிரதமராக இருந்து வருகிறார். இதற்கு முன், ஷேக் ஹசீனா 1991 முதல் 1996 வரை பிரதமராகவும் இருந்துள்ளார்.

ஷேக் ஹசீனா தனது நாடாளுமன்றத் தொகுதியான கோபால்கஞ்ச்-3 இல் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 2,49,965 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சி வேட்பாளர் நிஷாம் உதின் லஷ்கர் 469 வாக்குகள் மட்டுமே பெற்றார். ஷேக் ஹசீனா 1986 முதல் 8-வது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் அவாமி லீக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலையில் இருப்பதாகவும்,  முழுமையான முடிவுகள் இன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

Dinasuvadu Media @2023