ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்-உக்ரைன் வெளியிட்ட பரபரப்பு வீடியோ..!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கி 16-வது நாள் இன்றும் ஆகிறது. உக்ரைனில் ரஷ்யா ராணுவப்படை ஆயுதம் ஏந்திய வாகனங்கள் மற்றும் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம், ரஷ்யாவின் பொருளாதாரத்தை சீரழிக்கும் வகையில் கூடுதல் பொருளாதார தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகள் விதித்து வருகிறது. இந்நிலையில் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள உலக புகழ்பெற்ற ஈஃபிள் டவர் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்படுவது போன்ற கிராபிக்ஸ் வீடியோவை உக்ரைன் அரசு ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வீடியோவில், பாரீஸில் உள்ள ஈஃபிள் டவர் முன் ஒரு பெண் போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். அப்போது திடீரென அப்பகுதியில் பயங்கரமான ஏவுகணை தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஈஃபிள் டவர் மற்றும் அதன் அருகில் இருந்த கட்டிடங்கள் தாக்குதலில் விழுந்து நொறுங்குகிறது. அங்கே வசிக்கும் மக்கள் பயத்தில் ஓடுகிறார்கள். இதன் பின்னர் அந்த வீடியோவில் சில ஆங்கில வரிகள் தோன்றுகிறது.
அந்த வார்த்தைகள், “மற்றுமொரு ஐரோப்பிய நாட்டின் தலைநகருக்கு இந்த நிலைமை ஏற்படுவதை யோசித்து பாருங்கள். இது நடந்துவிட கூடாது என்று தான் நாங்கள் எண்ணுகிறோம். அதனால் உக்ரைன் வான் எல்லைகளை மூடுவதாக அறிவியுங்கள். இல்லையெனில், உக்ரைனுக்கு வான் போர் வீரர்களை அனுப்பி வையுங்கள். நாங்கள் வீழ்ந்தால் நீங்களும் வீழ்ந்ததாகவே அர்த்தம்”என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகள் உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளிடம் கூறிய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதுள்ள போர் நிலைமையின் தீவிரத்தை அனைவருக்கும் உணர்த்தும் பொருட்டு இந்த வீடீயோவை உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சகம் டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
We also thought that it could never happen pic.twitter.com/3YPf9gRScx
— Олександр Мережко (@3TrAmvL026aJRar) March 11, 2022