வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.., 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றம்.!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக, சென்னை முதல் தூத்துக்குடி வரையிலான 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நேற்று காலை வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே பகுதிகளில் நிலவியது.
இது, இன்று காலை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, காலை மேற்கு வங்காள வங்கதேச கரையை கடந்து, மேற்கு வங்காள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் வங்கதேச கடலோரப்பகுதிகளில் நிலவகிறது.
இது புயலாக வலுப்பெறக்கூடிய வானிலை சூழலை குறிக்கிறது. இதன் காரணமாக, துறைமுகங்களில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டால், புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும், துறைமுகங்கள் பாதிக்கப்படாமல் பலமான காற்று வீசக்கூடும் என்றும் அர்த்தம்.
இந்நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், மற்றும் தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் இந்த எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, ஆழ்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று முதல் 27ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், தெற்கு- மத்திய-வடக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.