கொட்டும் தீர்க்கும் கனமழை… நீலகிரி – கோவை மாவட்டங்களுக்கு இன்றும் ரெட் அலர்ட்.!
கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (27-ஆம் தேதி) உருவாகிறது என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இந்த நிலையில், ரெட் அலர்ட்டை டூரிஸ்ட் கொஞ்சம் சீரியஸா எடுக்கனும்.. இன்று ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் வெளியே வருவதை தவிர்க்க அம்மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் இன்றைய தினம், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், நீலகிரி, ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.