மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி.!
தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டெல்லி : நேற்று முன் தினம் மத்தியகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு கொங்கன் கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தெற்கு கொங்கன் கடற்கரையை கடந்தது. பிறகு கிழக்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுகுறைந்து.
தற்பொழுது, மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். இதன் காரணமாக, மே 28 முதல் மே 30 வரை மத்திய மற்றும் வடக்கு வங்காள விரிகுடாவில் மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நேரத்தில் மீனவர்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அருவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று முதல் 29ம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
தெற்கு மற்றும் மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தெற்கு-மத்திய வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.