“நான் சம்பாதித்து சொந்த காசுல எடுத்த படம்”…ஹீரோயினாக களமிறங்கும் ஜோவிகா!
ஜோவிகா இரண்டு படத்தில் ஹீரோயினாக நடிக்க கமிட் ஆகி இருப்பதாக அவருடைய தாயாரும் நடிகையுமான வனிதா தெரிவித்துள்ளார்.

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலமானவரும், நடிகை வனிதாவின் மகளுமான ஜோவிகா விஜயகுமார் நடிகையாகவும், தயாரிப்பாளாகவும் களமிறங்கியுள்ளார். தயாரிப்பாளராக வனிதா இயக்கி நடித்திருக்கும் மிஸஸ் & மிஸ்டர் திரைப்படத்தினை வனிதா புரொடக்ஷன்ஸ் மூலம் தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் ராபர்ட் ஸ்ரீமன், ஷகீலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் வரும் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. படம் வெளியாக நாட்கள் நெருங்கியுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு ஆர்வம் கட்டிக்கொண்டு வருகிறது.
அந்த வகையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றது. அதில் வனிதா, பவர் ஸ்டார், ஸ்ரீகாந்த் தேவா, ஜோதிகா என பலரும் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய ஜோதிகா தன்னுடைய சொந்தப்பணத்தில் இப்படத்தை தயாரித்ததாக பேசினார். இது குறித்து பேசிய அவர் ” இந்த மேடையில் தயாரிப்பாளராக நிற்க வைத்த கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறேன் என்றால் அதற்கு பெரிய காரணம் விஜய் தொலைக்காட்சி தான்.
விஜய் தொலைக்காட்சி தான் எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு கொடுத்தது. எனவே, விஜய் டிவிக்கும், ஹாட்ஸ்டாருக்கும் இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். நான் உழைத்து சம்பாதித்த பணத்தில் தான் இந்த படத்தை தயாரித்திருக்கிறேன்” எனவும் பெருமையாக பேசினார்.
அவரைத்தொடர்ந்து பேசிய வனிதா ” இந்த மேடையில் நிற்பதே எனக்கு மிகவும் எமோஷனலாக இருக்கிறது. நான் எதற்காக சொல்கிறேன் என்பதை நீங்கள் படம் பார்த்தீர்கள் என்றால் கண்டிப்பாக புரியும். எனக்கு கொடுத்த அன்பை என்னுடைய பொண்ணு ஜோவிகாவுக்கும் கொடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். அவளையும் ஜோவிகா விஜயகுமாராக ஏற்றுக்கொள்வீர்கள் என நான் எதிர்பார்க்கிறேன்.
அதைப்போல இந்த நேரத்தில் நான் இன்னொரு முக்கியமான செய்தியையும் அறிவிக்க ஆசைப்படுகிறேன். அது என்னவென்றால், ஜோவிகா கதாநாயகியாகவும் நடிக்கிறார். கதாநாயகியாக நடிக்க இரண்டு படங்களுக்கு கையெழுத்து போட்டிருக்கிறார்” எனவும் மகிழ்ச்சியுடன் வனிதா தெரிவித்தார்.