VGP பூங்காவின் ராட்டினத்தில் பழுது…அந்தரத்தில் தவித்த 30 பேர்!
VGP பூங்கா நிர்வாகத்திற்கு காவல்துறை நோட்டீஸ் அனுப்பி தற்காலிகமாக மூடுவதற்கும் உத்தரவிட்டுள்ளது.

சென்னை : கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அமைந்துள்ள VGP பொழுதுபோக்கு பூங்காவில், நேற்று ராட்டினம் திடீரென பழுதானதால் 36 பேர் 50 அடி உயரத்தில் மூன்று மணி நேரமாக அந்தரத்தில் சிக்கித் தவித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு இந்த தகவல் தெரியப்படுத்தப்பட்டது.
தகவலை அறிந்த தீயணைப்பு வீரர்களும் உடனடியாக பூங்காவிற்கு சென்று சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். இந்தச் சம்பவம் பூங்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, நீலாங்கரை காவல்துறை VGP பூங்கா நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி, சம்பவம் குறித்து விளக்கம் கோரியுள்ளது.
அது மட்டுமின்றி, ராட்டினத்தின் பழுது மற்றும் அதனால் ஏற்பட்ட ஆபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட உள்ளது. மேலும், பூங்காவின் பாதுகாப்பு அம்சங்களை மறு ஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது. எனவே, காவல்துறை, பூங்காவை தற்காலிகமாக மூடுமாறு நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. VGP பொழுதுபோக்கு பூங்கா பிரபலமான பொழுதுபோக்கு இடமாக இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் பூங்காவின் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.
மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் இன்று பூங்காவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த ஆய்வில், பூங்காவின் இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் முழுமையாக சோதனை செய்யப்படும். அதன்பிறகு தான் மீண்டும் பூங்கா திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.