இன்று இந்த 2 மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்…எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!
தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : இன்று (27-05-2025) ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக வடக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையக்கூடும். தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவிகிறது.
இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஒரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதன் காரணமாக இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை (மே 28) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.