எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை – முதல்வர் ஸ்டாலின் பதிலடி!
எனது டெல்லி பயணம் குறித்து அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை : கடந்த 24ம் தேதி வளர்ச்சியடைந்த பாரதம் என்ற தலைப்பில் பிரதமர் மோதி தலைமையில், நிதி ஆயோக்கின் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் பங்கேற்று கொண்டனர்.
இந்த நிதி ஆயோக் கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருந்தார். ஏதோ டெல்லிக்கு போய் பல ஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டிற்கான நிதியை கையோடு கொண்டு வந்த ரேஞ்சுக்கு பில்டப் செய்கிறீர்களே? உங்கள் குடும்பம் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி ரூபாய்களையும், அதன் பின்னணியில் உள்ள “நிதி”களையும், அவர்களுக்கு துணையான “தம்பி”களையும் காப்பற்றிவிடலாம் என்ற நப்பாசையில் தானே பயந்து, நடுங்கி டெல்லிக்கு ஓடோடி சென்றீர்கள்? அதுவும் மண்ணோடு மண்ணாகிப் போனதாமே?” எனவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
எடப்பாடி வைத்த விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பேசுகையில் ” எடப்பாடி பழனிசாமி இந்த ஆட்சியை பற்றி குறை எதுவும் சொல்ல முடியவில்லை என்ற காரணத்தால் அரைத்த மாவை அரைத்துக்கொண்டு இருக்கிறார்.
ஆட்சியில் குறை சொல்ல எந்த விஷயமும் கிடைக்கவில்லை என்பதால் திரும்பத் திரும்ப அரைத்த மாவை அரைத்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார். எனவே நானும் அதற்கு திரும்பத் திரும்ப பதில் அளிக்க விரும்பவில்லை. அவருடைய பேச்சுக்களுக்கு பதில் அளித்து நான் என்னுடைய தரத்தை குறைத்துக் கொள்ள விரும்பவில்லை” எனவும் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.