வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சமீபத்திய தகவல்களின்படி, வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் வடக்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்தால், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும், மேலும் அதிகபட்ச வெப்பநிலை 36-37°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29°C அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.