5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்வு – ஆவின் நிறுவனம் விளக்கம்!

aavin milk

5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியான நிலையில், ஆவின் நிறுவனம் அதற்கு விளக்கம் அளித்துள்ளது.

தமிழகத்தில் 5 லிட்டர் கொண்ட பச்சை நிற நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் விலை 10 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. நேற்றுவரை ரூ.210க்கு விற்கப்பட்ட 5 லிட்டர் பச்சை நிற ஆவின் பால் பாக்கெட் இன்று முதல் ரூ.220ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஏற்கனவே, பால் முகவர்களுக்கு அனுப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 லிட்டர் பால் விலை உயர்வால், டீ மற்றும் காப்பி உள்ளிட்ட பால் பொருட்கள் மீதான விலையும் உயரக்கூடும் என பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்ற 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிப்பு என்று ஊடகங்கள் மூலமாக செய்தி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு பால் உ ற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மூலமாக  சென்னை முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனத்தால் வழங்கப்பட்டு வருகின்ற பச்சை நிற பால் பாக்கெட் பொது மக்களுக்கு ஒரு லிட்டர் ரூபாய் 44 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் ஐந்து லிட்டர் பால் ரூபாய் 210க்கு விற்பனை செய்யப்பட்டது.

எனவே, வணிக நிறுவனத்திற்கும் பொது மக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்பொழுது ரூபாய் 210 (42*5=210)லிருந்து ரூபாய் 220 (44*5=220)ஆக மாற்றப்பட்டுள்ளது. இதனை ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவித்துள்ளது.

உண்மையில், பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள அதே விலையை வணிக பயன்பாட்டு நிறுவனங்களுக்கும் வழங்கவே வணிக நிறுவனங்களுக்கான விலை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்