LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!
இமாலய இலக்கை எளிதாக எட்டடி பிடித்து லக்னோ அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 4வது வெற்றியை பதிவு செய்தது ஹைதராபாத் அணி.

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்தது. லக்னோ அணிக்காக மார்ஷ் 65 ரன்களும், மார்க்ராம் 61 ரன்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்
முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நல்ல தொடக்கத்தை பெற்றது. லக்னோ அணி சார்பாக, மிட்செல் மார்ஷ் 39 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்ஷ் மற்றும் மார்க்ராம் இடையே முதல் விக்கெட்டுக்கு 115 ரன்கள் கூட்டு சேர்ந்தது. கேப்டன் ரிஷப் பந்த் 6 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐடன் மார்க்ராம் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஆயுஷ் 5 பந்துகளில் 3 ரன்கள் எடுத்தார்.
நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 45 ரன்கள் (6 பவுண்டரிகள், 1 சிக்சர்) எடுத்து இறுதி ஓவர்களில் வேகத்தை அதிகரித்தார். கடைசியில் தடுமாற்றம் இருந்தபோதிலும், ஆகாஷ் தீப் கடைசி பந்தில் ஒரு சிக்ஸர் அடித்து எல்எஸ்ஜி 200 ரன்களைக் கடக்க உதவினார். ஹைதராபாத் அணிக்காக பந்துவீசிய இஷான் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளையும், ஹர்ஷ் துபே, ஹர்ஷல் படேல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர், 206 ரன்கள் என்ற இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இரண்டாவது ஓவரிலேயே ஆரம்பத்திலேயே சறுக்கியது. அதர்வா 13 ரன்கள் எடுத்த பிறகு அவுட் ஆனார். தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். இஷான் கிஷன் 28 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக, ரவி பிஷ்னாய் வீசிய 7வது ஓவரில் 26 ரன்களை விளாசி ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தொடந்து 4 சிக்ஸர் விளாசினார். அந்த ஓவரில் wd,0,1,6,6,6,6 என பந்துகளை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார். 18 பந்துகளில் அரைசதம் கடந்த அபிஷேக் ஹைதராபாத் அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அடுத்த ஓவரிலேயே திக்வேஷ் ராதி பந்தில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் தந்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். அவர் தனது இன்னிங்ஸில் நான்கு பவுண்டரிகளையும் ஒரு சிக்ஸரையும் அடித்தார். லக்னோ அணி தரப்பில் திக்வேஷ் ரதி இரண்டு விக்கெட்டுகளையும், வில்லியம் ஓ’ரூர்க் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இறுதியில், ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, 18.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால், லக்னோ அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேற்றியது.
இதன் மூலம், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி பிளே ஆஃப் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஐந்தாவது அணியாக மாறியது. லக்னோவைத் தவிர, கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய அணிகள் இறுதி-4க்கான போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன. இப்பொழுது, நான்காவது இடத்திற்காக டெல்லிக்கும் மும்பைக்கும் இடையே போட்டி நடக்கப் போகிறது.