மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார் செந்தில் பாலாஜி!

உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து கடந்த 7-ஆம் தேதி சென்னை புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டது. அமலாக்கத்துறையின் 5 நாள் காவல் விசாரணை இன்றுடன் நிறைவு பெற்றதை அடுத்து, நீதிமன்றம் உத்தரவுப்படி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அனைத்து ஆவணங்களும் ட்ரங்க் பெட்டியில் வைத்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
செந்தில் பாலாஜியிடம் மேலும் 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு அளித்தது. இந்த நிலையில், நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் சென்னை புழல் சிறையில் அடைக்க செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் புழல் சிறை உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து செல்லப்பட்டுள்ளார்.