2026 மட்டுமில்லை..எப்போதும் திமுக ஆட்சி தான்…முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
2026 மட்டுமல்ல 2031, 36 என எல்லாமே தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் என உதகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி கொடுத்துள்ளார்.

சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஐந்து நாட்கள் பயணமாக உதகைக்குச் சென்றுள்ள நிலையில், நேற்று முதல் நாளாக நடைப்பயிற்சி மேற்கொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக மலைப்பகுதி மேம்பாட்டு திறந்தவெளி மைதானத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை காரில் இருந்தபடி சந்தித்து அவர்களுடைய கேள்விகளும் பதில் அளித்தார். இது குறித்து பேசிய அவர் ” 5 நாள் பயணத்தில் மக்களை சந்திக்க கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது பெருமையாக இருக்கிறது. மக்கள் எந்த அளவுக்கு திமுகவுக்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் மட்டுமில்லை இங்கு சுற்றுலா பயணிகளாக வந்திருக்கும் மக்களும் எழுச்சியையும் ஆதரவையும் வெளிப்படுத்தியதை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது” என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் 2026 தேர்தல் எப்படி இருக்கும்? என கேட்டார். அந்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ” 2026 தேர்தலில் மட்டும் திமுக வெற்றி இல்லை அதற்கு பிறகு வரும் 2031 மற்றும் அதற்கு பிறகு 2036 என எப்போதும் திராவிட மாடல் ஆட்சிதான் தமிழ்நாட்டில் நிலைத்து இருக்கும்” எனவும் பேசினார்.
அடுத்ததாக ஆளுநர் விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” ஆளுநர் வழக்கு விவகாரத்தில் குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்வர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு உரிய நடவடிக்கை எடுப்போம்” எனவும் கூறினார்.