“படத்தால் ஏற்பட்ட கடனுக்கு வட்டியை நான் மட்டுமே கட்டி வருகிறேன்” – ரவி மோகன் குற்றச்சாட்டுக்கு மாமியார் மறுப்பு.!
நடிகர் ரவி மோகன் குற்றச்சாட்டுகளுக்கு, தயாரிப்பாளரும் அவரது மாமியாருமான சுஜாதா விஜயகுமார் மறுப்புத் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னை : நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து பிரச்னையில், இரு தரப்பும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளன. ரவி மோகனின் பல படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார், ஆர்த்தி ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ரவி மோகன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்த ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு ரவி மோகன் சமூக ஊடகங்களில் ஒரு நீண்ட கடிதத்தை வெளியிட்ட பிறகு அவரது அறிக்கை வந்துள்ளது. அதில், இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்ட நிலையில், இப்போது நெஞ்சில் குத்தப்பட்டதாக நடிகர் ரவி மோகன் வேதனை தெரிவித்திருந்தார்.
தனது குழந்தைகள் தான் பெருமை எனவும், மனைவியைதான் பிரிந்திருக்கிறேன், குழந்தைகளை அல்ல எனவும் ஆர்த்தியின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார். மேலும், தன்னையும், தனது இணையரையும் தவறாக சித்தரித்து பதிவிடுவது வருத்தத்தை கொடுப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், மகளும் மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும் என்பதே என் ஒரே விருப்பம். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு நான் பொறுப்பேற்க வைத்தேன் என ரவி மோகன் கூறியது முற்றிலும் பொய்யானது என்று சுஜாதா விஜயகுமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
கூடுதலாக அந்த அறிக்கையில், ”என் மாப்பிள்ளை கூறியதால், ‘அடங்க மறு’, ‘பூமி’, ‘சைரன்’ போன்ற திரைப்படங்களை தயாரித்தேன். இதற்காக ரூ.100 கோடிக்கும் மேலாக கடன் வாங்கியுள்ளேன். இந்த கடனுக்காக புதிய படம் ஒன்றில் நடித்து கொடுக்கிறேன் என்று தான் கூறினார். கடனுக்கு அவர் பொறுப்பேற்பதாக கூறவில்லை” என வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
ரவி மோகன் சொல்லும் பொய்கள், கதாநாயக பிம்பத்தில் இருந்து அவரை தரம் தாழ்த்தி விடுகிறது.ரவி மோகனின் ஆலோசனையின் பேரிலேயேதான் அடுத்தடுத்து படங்களை தயாரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். ஒரே ஒரு ரூபாய் கடனுக்கு பொறுப்பேற்க வைத்திருந்தாலும், அதற்கான ஆதாரத்தை காட்டுங்கள்.
வார்த்தைக்கு வார்த்தை அம்மா, அம்மா என்றழைக்கும் ரவி மோகனை இன்றும் மகனாகவே நினைக்கிறேன். என் மகளும், ரவி மோகனும் இணைந்து வாழ வேண்டும் என்று உளப்பூர்வமாக விரும்புகிறேன். சித்திரவதை செய்த மாமியார் என்று புதிய வேதனையையும் என் மீது சுமத்தாதீர்கள்” என்று ரவி மோகன் குற்றசாட்டுகளை மறுத்து உருக்கமாக குறிப்பிட்டு இருக்கிறார்.