கேரள கடலில் கவிழ்ந்த சரக்குக் கப்பல்.., கரை ஒதுங்கிய கண்டெயினர்கள்.!
கேரளாவில் நேற்று முன்தினம் கடலில் கவிழ்ந்த சரக்கு கப்பலில் இருந்து சில கண்டெனர்கள், கொல்லம் பகுதியில் கரை ஒதுங்கியுள்ளன.

திருவனந்தபுரம் : கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சிக்கு சென்ற லைபீரியா நாட்டைச் சேர்ந்த MSC ELSA 3 என்ற சரக்குக் கப்பல் நேற்று முன்தினம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கப்பலில் மொத்தமாக 25 பேர் இருந்த நிலையில் லைஃப் ஜாக்கெட் உதவியுடன் 9 பேர் கடலில் குதித்து தப்பித்தனர். கப்பலில் சிக்கிய 16 பேரை மீட்கும் ப பணிகள் தீவிரமடைந்துள்ளது.
சரக்கு கப்பல் மூழ்கி இருக்கும் இடத்தை சுற்றி கடலோர காவல் படை, சிறிய விமான மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கண்டெய்னர்களில் 367 மெட்ரிக் டன் குறைந்த கந்தக எரிபொருள் உள்ளதால், அவை கரை ஒதுங்கும் போது மக்கள் யாரும் அருகே செல்ல வேண்டாம் என கேரள பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரிக்கைவிடுத்துள்ளது.
சரக்கு கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் கரைக்கு நகர்ந்து வருகிறது. கடந்த 12 மணி நேரத்தில் சரக்குக் கப்பலில் இருந்து எட்டு கண்டெயினர்கள் கொல்லம் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் கண்டெயினர் அதிகாலை 4 மணிக்கு ஆலப்பாட் கடற்கரையிலும், அதைத் தொடர்ந்து மூன்று கண்டெயினர்கள் கொல்லத்தில் உள்ள நீண்டகரா கடற்கரையிலும் காணப்பட்டன. கடற்கரையை அடைந்த கண்டெயினர்களில் எந்த அபாயகரமான பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று கடலோர காவல்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.