கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்.! 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.!
கேரள மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு திங்கட்கிழமை இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கொச்சி : தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, கனமழை எச்சரிக்கை காரணமாக 10 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வெள்ளப்பெருக்கு, பயண இடையூறுகள் மற்றும் பாதுகாப்பு எச்சரிக்கைகள் காரணமாக மாநிலம் முழுவதும் சுற்றுலா தடைகள் மற்றும் மக்களை வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
பத்தனம்திட்டா, இடுக்கி, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளையும், கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் மற்றும் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் மற்றும் திருச்சூர் மாவட்டங்களுக்கு மே 29 அன்று மத்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இன்று முதல் 29 ஆம் தேதி வரை கேரளா, கர்நாடகா மற்றும் லட்சத்தீவு கடற்கரைகளில் மீன்பிடிக்க அனுமதிக்கக்கூடாது என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.