டிரம்பை கொல்ல திட்டம்? ஸ்கெட்ச் போட்ட ஈரான்..உண்மையை உடைத்த இஸ்ரேல்!
அமெரிக்க அதிபர் ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டிருக்கிறது என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் மத்திய கிழக்கில் பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. ஜூன் 13 முதல் இஸ்ரேல், ஈரானின் அணுசக்தி மையங்கள், இராணுவ இலக்குகள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் அமெரிக்காவின் பங்கு குறித்து, டிரம்ப் இந்தத் தாக்குதல்களில் அமெரிக்காவுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால், இஸ்ரேலுக்கு ஆயுத ஆதரவு வழங்குவதாக ஈரான் அமெரிக்காவை குற்றம்சாட்டியுள்ளது.
இப்படியான பரபரப்பான சூழலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பை கொல்ல ஈரான் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டை முன் வைத்தது தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. ஜூன் 15, 2025 அன்று அமெரிக்க உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு (Fox News) அளித்த பேட்டியில், ஈரானின் இஸ்லாமிய ஆட்சி ட்ரம்பை தங்கள் அணு ஆயுதத் திட்டத்துக்கு முதல் எதிரியாகக் கருதுவதாகவும், அவரை புரட்சிகர பாதுகாப்பு படையின் உளவுத்துறை மற்றும் புராக்ஸிகள் மூலம் கொல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு, இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் உயர்த்தியுள்ளது நெதன்யாகு, ட்ரம்பின் கடுமையான கொள்கைகளே ஈரானுக்கு அவரை அச்சுறுத்தலாக மாற்றியதாகக் குறிப்பிட்டார். ட்ரம்ப் 2018-ல் ஈரான் அணு ஒப்பந்தத்தை ரத்து செய்ததையும், ஈரானின் புரட்சிகர படைத் தளபதி காசிம் சுலைமானியை 2020-ல் கொன்றதையும் சுட்டிக்காட்டினார். “ட்ரம்ப் ஈரானுக்கு உராணியம் செறிவூட்ட அனுமதிக்கவில்லை, இது அவர்களுக்கு அணு ஆயுதம் உருவாக்குவதற்கு தடையாக உள்ளது,” என்று நெதன்யாகு கூறினார்.
இதனால், ஈரான் ட்ரம்பை “முதல் எதிரி” என்று கருதுவதாகவும், அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களை முற்றிலுமாக ஒழிக்க இஸ்ரேல் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உறுதியளித்தார். ட்ரம்புடன் இணைந்து செயல்படுவதாகக் கூறிய அவர், “நாங்கள் எங்கள் நாட்டை மட்டுமல்ல, உலகையும் பாதுகாக்கிறோம்” என்றார். ஈரானின் அணு ஆயுத முயற்சிகள் இஸ்ரேலுக்கு “இருத்தலியல் அச்சுறுத்தல்” என்றும், இதைத் தடுக்க வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.