எலான் மஸ்க் கட்சி தொடங்கியது முட்டாள்தனமானது…டொனால்ட் டிரம்ப் விமர்சனம்!
குழப்பத்தை ஏற்படுத்தவே புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார்.

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் புதிதாக தொடங்கிய ‘அமெரிக்கா கட்சி’ (America Party) குறித்து கடுமையாக விமர்சித்து, அதை “முட்டாள்தனமானது” என்று கூறினார். ஜூலை 7, 2025 அன்றுதனது Truth Social தளத்தில் பதிவிட்ட அவருடைய நீண்ட பதிவில், மஸ்க்கின் இந்த முயற்சி அமெரிக்காவில் நிலவும் இரு கட்சி அமைப்பை குழப்புவதற்கு மட்டுமே உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டினார். டிரம்பின் இந்த விமர்சனம், மஸ்க்குடனான அவரது பொது மோதலின் ஒரு பகுதியாக வந்துள்ளது.
மஸ்க், டிரம்பின் வரி மற்றும் செலவு மசோதாவை விமர்சித்த காரணத்தால் இருவருக்கும் இடையே வாக்கு வாதங்கள் எழுந்தது. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்தது உலக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் வெடித்துள்ளது. மஸ்க், அமெரிக்க அரசியலில் இரு கட்சி முறையை “ஜனநாயக விரோதமானது” என்று கூறி, மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டெடுக்க ‘அமெரிக்கா கட்சி’யை தொடங்குவதாக அறிவித்தார். இதற்கு பதிலளித்த டிரம்ப், “மஸ்க் ஒரு ‘ரயில் விபத்து’ (TRAIN WRECK) ஆகி வருகிறார். அவரது புதிய கட்சி முயற்சி அபத்தமானது மற்றும் மக்களுக்கு எந்த பயனும் தராது,” என்று கூறினார்.
எனவே, இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து வரும் நிலையில், புதிய கட்சியை தொடங்கிய மாஸ்கை மீண்டும் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவின் அரசியல் அமைப்பு இரு கட்சி முறையில் திறம்பட செயல்பட்டு வருவதாகவும் ட்ரம்ப் வாதிட்டார். இது குறித்து கூறிய அவர் “இரு கட்சி முறை, அமெரிக்க மக்களுக்கு தெளிவான தேர்வுகளை வழங்குகிறது. மூன்றாவது கட்சி உருவாக்குவது, வாக்காளர்களை பிளவுபடுத்தி, அரசியல் அமைப்பை பலவீனப்படுத்தும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
மஸ்க்கின் புதிய கட்சி அறிவிப்பு, அவரது ஆதரவாளர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தினாலும், டிரம்ப் அதை “முட்டாள்தனமான” முயற்சியாக விமர்சித்தார். “மஸ்க் இதை ஒரு விளையாட்டாக நினைக்கலாம், ஆனால் இது அமெரிக்க மக்களுக்கு எந்த பயனும் தராது. மூன்றாவது கட்சிகள் அமெரிக்காவில் ஒருபோதும் வெற்றி பெற்றதில்லை,” என்று டிரம்ப் கூறினார். மேலும், மஸ்க்கின் நடவடிக்கைகள், குடியரசுக் கட்சியின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஒரு “ஒலிகார்ச்சியின்” முயற்சியாக இருக்கலாம் என்று அவர் குற்றம்சாட்டினார்.
டிரம்பின் இந்த கருத்து, மாகா இயக்கத்திற்குள் ஏற்பட்டுள்ள பிளவை மேலும் வெளிப்படுத்துகிறது.டிரம்பின் இந்த விமர்சனங்கள், 2026 இடைத்தேர்தலுக்கு முன்னதாக குடியரசுக் கட்சியினரை ஒருங்கிணைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. மஸ்க்கின் ‘அமெரிக்கா கட்சி’ அறிவிப்பு, குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை பிரிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். “மஸ்க்கின் செல்வாக்கு, குடியரசுக் கட்சியை பலவீனப்படுத்தலாம். ஆனால், அவரது கட்சி உண்மையில் வெற்றி பெறுமா என்பது சந்தேகமே,” என்று டிரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டார். ட்ரம்பின் விமர்சனத்திற்கு மஸ்க் பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.