நெல்லை கொலை : பெற்றோர் தூண்டுதலில் கொலையா? போலீசார் தீவிர விசாரணை!
தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததால் கவினை கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட சுர்ஜித் வாக்குமூலம் அளித்துள்ளார்.

நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27) நேற்று பட்டப்பகலில் மர்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக, வேறு சமூகத்தைச் சேர்ந்த சுர்ஜித் (வயது 25) என்ற இளைஞர் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சுர்ஜித், “கவின் தனது தங்கைக்கு காதல் தொல்லை கொடுத்ததால் ஆத்திரத்தில் அவரைக் கொலை செய்தேன்,” என்று வாக்குமூலம் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுர்ஜித்தின் பெற்றோர், சரவணகுமார் மற்றும் கிருஷ்ணவேனி, மணிமுத்தாறு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர்களாகப் பணிபுரிகின்றனர். இதனால், இந்தக் கொலை சம்பவம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த கவினின் தாய் செல்வி, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், “சுர்ஜித்தின் பெற்றோரான காவல் உதவி ஆய்வாளர்கள், தங்கள் மகனைத் தூண்டிவிட்டு, என் மகனைக் கொலை செய்ய வைத்தனர்,” என்று குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் புகாரை அடுத்து, காவல் துறை உயர் அதிகாரிகள் இந்த வழக்கை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.காவல் துறையினர், சரணடைந்த சுர்ஜித் மீது வன்கொடுமை (SC/ST) தடுப்புச் சட்டம், கொலை, கொலை முயற்சி, மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்திய குற்றம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சுர்ஜித்தின் பெற்றோருக்கு இந்தக் கொலையில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கவினின் உடல், பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு காரணமான காதல் தொடர்பான பிரச்சினை மற்றும் சாதி முரண்பாடுகள் குறித்து உள்ளூர் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது. காவல் துறையினர், மேலும் மோதல்கள் ஏற்படாமல் தடுக்க, பாளையங்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கவினின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.