”பிரதமரின் இமேஜை காக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” – ராகுல் காந்தி ஆவேசம்.!
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவாக துணை நின்றது என மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியுள்ளார்.

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பேசுகையில், ”பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிப்பதே மனதுக்கு வலியை தருகிறது, பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களை எனது உறவினர்கள் இறந்தது போல கருதுகிறேன். மனைவி கண்முன்னே கணவர் கொல்லப்பட்ட கொடூரம் அரங்கேறியது.
எதிரிகளை தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம்அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது. 1971ல் பாகிஸ்தான் போரின் போது இந்திய இராணுவத்திற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முழு சுதந்திரம் கொடுத்தார். அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அவர் அடிபணியவில்லை.
ஆப்ரேஷன் சிந்தூர் விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் முழு ஆதரவு வழங்கினார்கள். ஆனால் ஆப்ரேஷன் சிந்தூரை 22 நிமிடங்களில் முடித்துவிட்டது ஒன்றிய அரசு. இரவு 1.35 மணிக்கு பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அரசு தாக்குதல் நடத்திய விபரங்களை தெரிவித்துள்ளனர்.
இந்தியப் படைகளின் நகர்வு தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா வழங்கியுள்ளது. ஆனால், சீனா என்ற பெயரையே பாதுகாப்பு அமைச்சரும், வெளியுறவு அமைச்சரும் சொல்லவில்லை. மீண்டும் ஒருமுறை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினால், உங்களது பதிலடி என்ன? சொல்ல முடியுமா?
தீவிரவாதத்திற்கு எதிராக 100க்கும் மேற்பட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் ஒரு நாடு கூட பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது பாகிஸ்தானை மற்ற நாடுகள் கண்டித்தன; இப்போது கண்டிக்காதது ஏன்?
தீவிரவாதிகள் பற்றி கேள்வி கேட்டாலே பாகிஸ்தான் ஆதரவாளர்கள் என சித்தரிக்க முயற்சிக்கிறார்கள். இதுதான் பாஜக அரசின் மனநிலை. தனது இமேஜை பாதுகாக்க ராணுவத்தை பயன்படுத்துகிறார் பிரதமர் மோடி. பாதுகாப்புப் படைகளை தவறாக அவர் பயன்படுத்துவது அபாயகரமானது” என்று ஆவேசமாக பேசியிருக்கிறார்,.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025