பாஜகவில் இருந்து விலகிவிட்டோம்..எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை ! பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவிப்பு!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் அணி அறிவித்துள்ளது.

சென்னை : முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தலைமையிலான அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. சென்னையில் இன்று (ஜூலை 31, 2025) நடந்த தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி எஸ். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் இதனை உறுதிப்படுத்தினார்.
இது குறித்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் ” இன்று நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனை குழு கூட்டத்தில் 3 முக்கியமான விஷயங்கள் குறித்து முடிவு செய்யப்பட்டது. அதில் முதலில் ஒன்று தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக முடிவு செய்யப்பட்டது. இனிமேல் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் பயணிக்க மாட்டோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த உறவை முடித்து கொள்கிறோம்” என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து பேசிய அவர் ” இரண்டாவதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதையும் நாங்கள் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம். மூன்றாவதாக, எந்த கட்சிஉடனும் கூட்டணி என்பது இன்றயை நேரத்தில் இல்லை. கூட்டணி குறித்த விரைவில் முடிவு செய்யப்படும். கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்யும் கூட்டணி அமையும்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர் ஒருவர் என்ன காரணத்துக்காக பாஜக கூட்டணியில் இருந்து விலகல் என்ற கேள்வியை எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ” யாரையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் நோக்கம் அல்ல.எல்லாருக்கும் வாழ்த்து சொல்லவேண்டும் என்பது தான் எங்களுடைய விருப்பம். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பது நாடே அறியும்” எனவும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து ஓ. பன்னீர்செல்வத்திடம் காலையில் முதல்வர் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ” முதலமைச்சரை நடைப் பயிற்சியின்போது சந்தித்தேன், வணக்கம் சொல்லிவிட்டு சென்றுவிட்டேன்” எனவும் விளக்கம் அளித்தார்.