டெல்லி : இந்தியாவின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் ஏத்தர் 450எக்ஸ் மற்றும் ரிஸ்டா போன்ற மாடல்கள் மூலம் தங்களது அசைக்க முடியாத தரத்தை நிரூபித்த ஏத்தர் எனர்ஜி (Ather Energy) நிறுவனம், தற்போது முதன்முறையாக எலக்ட்ரிக் பைக் சந்தையில் கால் பதிக்கப் போவதைப் பக்காவான இலக்குடன் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
சந்தையில் தற்பொழுது இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் 150cc முதல் 300cc வரையிலான பவர்ஃபுல் பெட்ரோல் பைக்குகளுக்கு மிகக் கடுமையான போட்டியைக் கொடுக்கும் வகையில் இந்த புதிய எலக்ட்ரிக் பைக் உருவாக்கப்பட்டு வருகிறது. இதனுடைய எஞ்சின் பவர், செயல்திறன் மற்றும் பேட்டரி திறன் எப்படி இருக்கப்போகிறது என்கிற சுவாரசியமான விபரங்களை பார்ப்போம்.
ஏத்தர் எலக்ட்ரிக் பைக் எப்போது விற்பனைக்கு வரும்?
ஏத்தர் நிறுவனத்தின் இணை நிறுவனரும் சிடிஓ-வுமான (CTO) ஸ்வப்னில் ஜெயின் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில், இந்த எலக்ட்ரிக் பைக்கின் தயாரிப்புப் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருவதாகவும், இன்னும் மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குள் இந்த பைக்கை இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக லான்ச் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் இந்த பைக் வரும் 2029 ஆம் ஆண்டு வாக்கில் வாடிக்கையாளர்களின் கைகளுக்குக் கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.நிறுவனம் தற்போதைக்கு இதன் இறுதி வடிவமைப்பு, கச்சிதமான விலை அல்லது இதனுடைய பெயரை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. கடந்த காலங்களில் இந்த பைக்கை 2026-லேயே கொண்டு வர ஏத்தர் திட்டமிட்டிருந்த போதிலும், தங்களது புதிய இஎல் (EL) ஸ்கூட்டர் பிளாட்ஃபார்ம் மற்றும் சமீபத்தில் வெளியான 'ஏத்தர் கோனார்க்' ஸ்கூட்டரின் தயாரிப்புப் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்ததால் இந்த பைக்கின் லான்ச் டைம் தற்காலிகமாகத் தள்ளிப் போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?
ஏத்தர் நிறுவனம் சாதாரண ஸ்கூட்டர்களைப் போல இல்லாமல், ஒரு அசல் பவர்ஃபுல் பைக்கிற்கான கட்டமைப்பை இதில் உருவாக்கவுள்ளது. வழக்கமான பெட்ரோல் பைக்குகளில் பெட்ரோல் டேங்க் (Fuel Tank) மற்றும் இன்ஜின் இருக்கக்கூடிய அந்த பெரிய காலி இடத்தில், எலக்ட்ரிக் பைக்கிற்கான 8kWh முதல் 10kWh திறன் கொண்ட மிகப்பெரிய ராட்சத பேட்டரியை கச்சிதமாகப் பொருத்துவதற்கு ஏத்தர் திட்டமிட்டுள்ளது. இந்திய எலக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையிலேயே இவ்வளவு பெரிய பேட்டரி திறன் கொண்ட வண்டிகள் வருவது இதுவே முதல் முறையாகும்.
இந்த பெரிய பேட்டரி மூலம் இந்த பைக் சிங்கிள் சார்ஜில் 200 முதல் 250 கிலோமீட்டர் வரை மிக நம்பகமான நிஜ உலக மைலேஜை (Real-World Range) வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வண்டியின் எடையைக் குறைப்பதற்காகவும், சர்வதேச விநியோகச் சங்கிலி நெருக்கடியைச் சமாளிப்பதற்காகவும், மோட்டார்களில் பயன்படுத்தப்படும் கனரக அரியவகை காந்தங்களுக்குப் பதிலாக, லேசான அரியவகை காந்தங்களைப் பயன்படுத்தி புதிய மோட்டார் தொழில்நுட்பத்தையும் ஏத்தர் இதில் புகுத்தவுள்ளது.