டெல்லி : வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய தலைமுறை பஜாஜ் பல்சர் 125 பைக்கின் பர்ஸ்ட் லுக்குக்காக தற்போது ஷோரூம்களுக்கு வந்து சேர்ந்துள்ளன. வழக்கமான கிளாசிக் பல்சர் தோற்றத்தைத் தக்கவைத்திருந்தாலும், பல்வேறு நவீன மாற்றங்கள் மற்றும் மெக்கானிக்கல் மேம்பாடுகளுடன் இப்பைக் களமிறங்குகிறது.

வடிவமைப்பு மற்றும் அம்சங்கள்

புதிய பல்சர் 125 ஆனது கருப்பு மற்றும் சிவப்பு (Black & Red) கலந்த கலவையில் ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில் எல்இடி (LED) ஹெட்லைட் மற்றும் சிக்னேச்சர் வுல்ஃப்-ஐ (Wolf-eye) பொசிஷன் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், புளூடூத் இணைப்பு வசதியுடன் கூடிய புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் இதில் இடம்பெற்றுள்ளது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

புதிய சேஸ் மற்றும் மெக்கானிக்கல் மேம்பாடுகள்

இம்முறை முற்றிலும் புதிய சேஸில் இந்த பைக் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஜின் ஒரு ஸ்ட்ரெஸ்டு மெம்பராகப் (stressed member) செயல்படுகிறது. முன்பக்கத்தில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் புதிய இன்ஜினியரிங் மேம்பாடாக அட்ஜெஸ்டபிள் மோனோஷாக் (Monoshock) சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், எம்ஆர்எஃப் (MRF) டயர்களைக் கொண்ட 17 இன்ச் அலாய் வீல்களுடன் இப்பைக் வெளிவருகிறது.

மைலேஜ் விவரம்

தினசரி பயன்பாட்டிற்கும் அலுவலகப் பயணங்களுக்கும் பெரிதும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 124.4சிசி பைக், சிறந்த பெட்ரோல் திறனை வழங்குகிறது. இப்பைக் நகரச் சாலைகளில் தோராயமாக 50 முதல் 55 கி.மீ வரை மைலேஜ் வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்தினரின் வாங்கும் திறனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தலைமுறை பல்சர் 125 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ. 87,000 முதல் ரூ. 95,000 வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்ஜின் மற்றும் விலை குறித்த அத்தனை அதிகாரப்பூர்வத் தகவல்களும் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.