டெல்லி : ராயல் என்பீல்டு நிறுவனம் தனது டாப்-எண்ட் கிளாசிக் 350 வரிசையில் எமரால்டு கிரீன் மாடலுக்கு இணையாக இந்த புதிய சொகுசு எடிஷனைக் களமிறக்கியுள்ளது. செப்டம்பர் 22 முதல் அதிகாரப்பூர்வ ஷோரூம்களில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள இந்த பைக்கின் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், எக்ஸ்-ஷோரூம் விலை மற்றும் மற்ற விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சொகுசு இருக்கைகள்

புதிய சிக்னேச்சர் ஒயிட் மாடலில் பாரம்பரிய தோற்றத்துடன் கூடிய நவீன வடிவமைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெட்ரோல் டேங்க்கில் ஸ்டென்சில் பாணி புதிய கிராபிக்ஸ், இருபுறங்களிலும் கம்பீரமான ராயல் என்பீல்டு லோகோ மற்றும் பக்கவாட்டு பேனலில் புதிய கிளாசிக் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நீண்ட தூரப் பயணங்களின் போது ரைடர் மற்றும் பின்னால் அமர்பவருக்கு சோர்வு தராத வகையில், உயர்தர பழுப்பு நிற பிரீமியம் டூரிங் இருக்கைகள் இதில் தரநிலையாகப் பொருத்தப்பட்டுள்ளன.

ட்ரிப்பர் நேவிகேஷன்

நகர்ப்புற டிராஃபிக்கில் கிளட்ச் பிடிப்பதை எளிதாக்க அசிஸ்ட் அண்ட் ஸ்லிப்பர் கிளட்ச் வசதியும், விரல்களின் அளவிற்கு ஏற்ப சரிசெய்யக்கூடிய அட்ஜஸ்டபிள் கிளட்ச் மற்றும் பிரேக் லிவர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன்களை எளிதாக சார்ஜ் செய்ய ஹேண்டில்பாரில் டைப்-சி ஃபாஸ்ட் சார்ஜிங் போர்ட் இடம்பெற்றுள்ளது. அத்துடன் ப்ளூடூத் மூலம் செல்போனை இணைத்து டர்ன்-பை-டர்ன் மேப் வழிகாட்டலைப் பார்க்கும் பிரத்யேக 'ட்ரிப்பர் பாட்' (Tripper Pod) வசதியும் இந்த எடிஷனில் இன்பில்ட்டாக வழங்கப்பட்டுள்ளது.

இன்ஜின் பவர் மைலேஜ்

மெக்கானிக்கல் அமைப்பில் மாற்றமின்றி அதே புகழ்பெற்ற 349சிசி ஜே-சீரிஸ் சிங்கிள் சிலிண்டர், ஏர்-ஆயில் கூல்டு இன்ஜின் இதிலும் தொடர்கிறது. இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைந்து அதிர்வுகளற்ற சீரான பவரை வெளிப்படுத்துகிறது. மைலேஜைப் பொறுத்தவரை, தினசரி பயன்பாட்டில் லிட்டருக்கு 35 முதல் 40 கிமீ வரை நம்பகமான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

ஆன்-ரோடு விலை மற்றும் மாத தவணை (EMI) விவரம்

சென்னையில் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,24,275 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் சாலை வரி, பதிவு கட்டணம் மற்றும் முழு காப்பீடு சேர்த்து உத்தேச ஆன்-ரோடு விலை சுமார் ரூ.2.65 லட்சம் வரை வரும். ரூ.40,000 முன்பணம் செலுத்தி 3 வருடங்களுக்கு (36 மாதங்கள்) 9.5% வங்கிக் கடன் பெறும்போது, உத்தேச மாதத் தவணைத் தொகை (EMI) சுமார் ரூ.7,200 ஆக அமையும்.