டெல்லி : இந்தியாவில் ஆட்டோமேட்டிக் கியர் மற்றும் சிஎன்ஜி (CNG) எரிபொருள் இரண்டும் இணைந்துள்ள கார்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இது ஓட்டுநர் பயணத்திற்கு அதிக சௌகரியத்தையும், குறைந்த செலவில் சிறந்த மைலேஜையும் வழங்குகிறது. அந்த வகையில், ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் சிஎன்ஜி வசதியுடன் கிடைக்கும் சிறந்த கார்கள் பற்றி பார்ப்போம்.
டாடா பஞ்ச் (Tata Punch)
இந்தியாவின் மைக்ரோ-எஸ்யூவி பிரிவில், ஃபேக்டரி-fitted அதாவது ஆலை அளவிலேயே சிஎன்ஜி மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கலவையைக் கொண்டுள்ள ஒரே எஸ்யூவி டாடா பஞ்ச் மட்டுமே ஆகும். இது ஐந்து பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கக்கூடிய விசாலமான 5 சீட்டர் எஸ்யூவி வாகனமாகும்.
இது 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி தேர்வைக் கொண்டுள்ள நிலையில், அதிகாரப்பூர்வமாக ஒரு கிலோவிற்கு 26.99 கி.மீ மைலேஜ் வழங்குகிறது. இதில் டாடாவின் சிறப்பு வாய்ந்த iCNG டூயல் சிலிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதால், லக்கேஜ் வைக்க போதுமான பூட் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஆன்-ரோடு விலை நிலவரப்படி இதன் விலை ரூ. 9.74 லட்சம் முதல் ரூ. 12.17 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நிஸான் மேக்னைட் (Nissan Magnite)
மிகவும் குறைந்த பட்ஜெட்டில் ஆட்டோமேட்டிக் வசதியுடன் கூடிய சிஎன்ஜி எஸ்யூவி தேடுபவர்களுக்கு நிஸான் மேக்னைட் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதுவும் ஐந்து பேர் அமரக்கூடிய 5 சீட்டர் வாகனமாகும். எனினும், இதன் சிஎன்ஜி கிட் ஆலை அமைப்பிலிருந்து வராமல் டீலர் மூலம் ரெட்ரோபிட் முறையில் பொருத்தப்படுகிறது.
1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் உடன் வரும் இந்த வாகனம், ஒரு கிலோவிற்கு சுமார் 24.09 கி.மீ மைலேஜ் தரும் திறன் கொண்டுள்ளது. ஆன்-ரோடு விலை நிலவரப்படி இந்த மாடலின் விலை தோராயமாக ரூ. 7.83 லட்சம் முதல் ரூ. 11.23 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஹோண்டா எலிவேட் (Honda Elevate)
ஹோண்டா நிறுவனத்தின் பிரபலமான மிட்சைஸ் எஸ்யூவி ஆன எலிவேட்டிலும் டீலர் மூலமாக சிஎன்ஜி கிட் பொருத்திக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இது ஐந்து பேர் வசதியாகப் பயணம் செய்யக்கூடிய பிரீமியம் 5 சீட்டர் எஸ்யூவி ஆகும். சக்திவாய்ந்த 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டெட் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ள இந்த வாகனம், தோராயமாக 15 முதல் 16 கி.மீ மைலேஜ் வழங்கும்.
வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான வேரியண்டின் அடிப்படை விலையுடன் கூடுதலாக தோராயமாக ரூ. 80,000 முதல் ரூ. 90,000 வரை செலுத்தி ஹோண்டா டீலர்கள் மூலமாக இந்த சிஎன்ஜி கிட்டைப் பொருத்திக் கொள்ளலாம். உங்கள் குடும்பத்தின் தேவை மற்றும் பட்ஜெட்டிற்கு ஏற்ப இந்த ஆட்டோமேட்டிக் சிஎன்ஜி கார்களில் ஒன்றை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.