சென்னை : நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) தலைமையில் மாணவர்கள் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில், சென்னையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் பாலன் இல்லத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் உருவான அவரது கடைசித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ கடந்த வியாழக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியானது.

மேலும், த.வெ.க அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் உற்சாகமாகக் கொண்டாடினர். குறிப்பாக, சில அமைச்சர்கள் ஆனந்தக் கண்ணீருடன் திரைப்படத்தைப் பார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. ஒருபுறம் நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டம் உச்சத்தில் இருக்கும் அதே வேளையில், மறுபுறம் திரையரங்குகளில் இப்படக் கொண்டாட்டங்கள் அரங்கேறியது அரசியல் அரங்கில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில், நீட் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக வெள்ளிக்கிழமை அன்று நடிகை சனம் ஷெட்டி சென்னை போராட்டக் களத்திற்கு வருகை தந்தார். அங்கு அவர் உரையாற்றும் போது, "இது மாணவர்களின் போராட்டம். இங்கு சிலர் பேசிய கருத்துகளுடன் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த மேடையை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்துபவர்கள் தான் ஜோக்கர்கள், நாங்கள் அல்ல. நான் விஜயின் தீவிர ரசிகை. நேற்றுதான் ‘ஜனநாயகன்’ படம் பார்த்துவிட்டு வந்தேன்” என்று குறிப்பிட்டார்.

அவர் தனது பேச்சின் நடுவே விஜய்யின் படம் மற்றும் அரசியல் தொடர்பான கருத்துகளை முன்வைத்ததால், போராட்டக் களத்தில் இருந்த மாணவர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது.

உடனடியாக அவரது பேச்சை நிறுத்தும்படி வலியுறுத்திய போராட்டக்காரர்கள், அவரை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கோஷமிட்டனர். தொடர் எதிர்ப்பு காரணமாக சனம் ஷெட்டி மேடையிலிருந்து பாதியிலேயே வெளியேற நேரிட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி தனது ஆக்ரோஷமான எதிர்ப்பைப் பதிவு செய்தார். அதில், "கூப்பிட்டு வைத்துப் படத்தை பார்த்ததால் என்னை ஜோக்கர் என்று சொல்கிறார்கள். நான் ஒரு நாள் ஒரு படத்தை பார்த்தால் ஜோக்கரா? இயக்குநர் வெற்றி மாறன் இங்கே உட்கார்ந்து இருக்கிறாரே, அவர் எத்தனை படங்கள் எடுத்துள்ளார்? அவரையும் அப்படித்தான் ஜோக்கர் என்று சொல்வார்களா? நான் பேசிக் கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிவிட்டு என்னை வெளியேறச் சொன்னார்கள். இதுதான் ஜனநாயகமா? இது ஒரு போலியான போராட்டம்.

இந்த மேடையை தங்களது சொந்த அரசியல் அஜெண்டாவுக்காகப் பயன்படுத்த யாராக இருந்தாலும் நான் அனுமதிக்க மாட்டேன். ஆயிரம் பேர் எதிர்த்து நின்றாலும் எனக்குக் கவலை இல்லை. இவர்கள் ஜனநாயகத்திற்காகப் போராடவில்லை, மாறாகத் தனிப்பட்ட ஏஜெண்டாக்களை வைத்துத்தான் போராடுகிறார்கள். இந்த வலையில் யாரும் வீழ்ந்து விடாதீர்கள். நான் எனது தனிப்பட்ட கருத்தைத்தான் பேசுவேன். பேசுவதற்குச் சுதந்திரம் கொடுக்காத இவர்கள் எப்படி நாட்டிற்காகச் சுதந்திரத்திற்காகப் போராடுவார்கள்?" என்று காட்டமாகத் கேள்வி எழுப்பினார்.