கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு அரசு மதுபான நிறுவனமான பெவ்கோ (BEVCO) ஊழியர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான அதிகபட்ச போனஸ் தொகையானது ரூ. 1,05,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 2,500 கூடுதல் உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்தின் கலால் துறை அமைச்சர் எம். லிஜு அவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஊழியர்களுக்கு முன்பணமாக ரூ. 50,000 அவசரத் தேவைகளுக்காக வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், நிரந்தர ஊழியர்களைத் தவிர்த்துப் பிற பிரிவுகளில் பணியாற்றுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, வேலைவாய்ப்பு அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் போனஸ் ரூ. 250 அதிகரிக்கப்பட்டு ரூ. 6,250 ஆகவும், துப்புரவுப் பணியாளர்களுக்கு (Sweepers) ரூ. 6,750 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, தலைமைக் அலுவலகம் மற்றும் கிடங்குகளில் (Warehouses) பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாப்புப் பணியாளர்களுக்கு ரூ. 13,000 போனஸாக வழங்கப்படும் என்றும் மாநில அரசு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.