டெல்லி : மாநிலத்தில் உள்ள இந்திய அரசியலமைப்பு கிளப் வளாகத்தில், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராகப் போராடி வரும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் மிக முக்கியக் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முன்னதாக பேச்சுவார்த்தை நடுநிலையான இடத்தில் மட்டுமே நடக்க வேண்டும் என்ற CJP-யின் தொடர் வலியுறுத்தலை ஏற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா, நீட் விவகாரத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பத்தினருக்குத் உரிய இழப்பீடு வழங்குவது மற்றும் போராட்டக்காரர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக்கூடாது உள்ளிட்ட முக்கியக் கோரிக்கைகளை CJP பிரதிநிதிகள் தரப்பில் முன்வைக்கப்பட்டன.

CJP பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாகக் கேட்டறிந்து கொண்டதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா குறித்தான இறுதி முடிவை அறிவிக்க நாளை (ஜூலை 25) நண்பகல் வரை ஒன்றிய அரசு அவகாசம் கோரியுள்ளதாக CJP தரப்பு தெரிவித்துள்ளது.

இவர்களின் கோரிக்கைகளை அரசிடம் கொண்டு சேர்த்து ஆலோசித்து வருவதாகக் கூறியுள்ள இரு தரப்பினரும், நாளை மீண்டும் சந்தித்து இறுதி முடிவை எட்டத் திட்டமிட்டுள்ளனர். மறுபுறம், நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் CJP அமைப்பினர் நடத்தி வரும் தீவிரப் போராட்டத்தைக் கருத்தில்கொண்டு, எதிர்காலத்தில் தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகளை அடியோடு தடுத்து நிறுத்தக் கூடுதல் சிறைத்தண்டனை, பெருந்தொகை அபராதம் மற்றும் விரைவு நீதிமன்றங்களை உள்ளடக்கிய புதிய கடுமையான வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளது.

இத்தகைய கடுமையான சட்ட மசோதாவை வருகிற ஜூலை 27-ம் தேதியன்றே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவும் அரசு தீவிர முடிவு எடுத்துள்ள நிலையில், நாளைய CJP - மத்திய அமைச்சர்களின் இரண்டாம் கட்டச் சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.