கோவை : தனியார் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலை வழக்கு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் சிலரை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

பின்னணியும் கைது நடவடிக்கையும்

கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், காவல்துறை தீவிர விசாரணை நடத்தி 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் ஆராமுதன், அரவிந்த், சிவரோகித் மற்றும் மணி பாலு ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள சிலரைத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து கோவை எஸ்பி அளித்த விளக்கத்தில், "சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுக்கு இடையேயான மோதல் மற்றும் செல்போன் பறிப்பு காரணமாகவே இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

உதயநிதி கண்டனம்

இச்சம்பவம் குறித்துச் சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார். இது குறித்து அவர் பேசுகையில் "கோவையில் தனியார் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்கள் அடங்கிய சுமார் 20 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

போதைப்பொருள் விற்பனை குறித்த ரகசியத் தகவலை அமுதனிடம் பெற்ற காவல்துறையினர், அதைச் சம்மந்தப்பட்ட போதைப்பொருள் விற்பனையாளர்களிடமே கசிய விட்டுள்ளனர்.அதனால்தான் அமுதன் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அவனது பெற்றோர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டுகின்றனர். இந்தப் பயங்கரச் சம்பவத்திற்குத் தமிழக அரசு முழுப் பொறுப்பேற்று உரிய விளக்கம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கக் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். படுகொலை செய்யப்பட்ட மாணவன் அமுதன் குடும்பத்திற்கு உடனடியாக நீதி கிடைக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.

அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டிற்குப் பதிலளித்து அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், "இது போதைப்பொருள் தகவலால் நடந்த கொலை அல்ல. சம்பந்தப்பட்ட மாணவர்களிடையே ஏற்கனவே இருந்த கோஷ்டி மோதல் (Gang rivalry) காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது" என்றார். அமைச்சர் கூறிய இந்தக் கருத்தால் ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் பேரவையில் கடும் கூச்சலிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.