சென்னை : தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிரான தனித் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) எம்.எல்.ஏ. தளி ராமச்சந்திரன், நீட் தேர்வுக்கு எதிரான தனது கட்சியின் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ததுடன், விஜய் நடித்த 'கத்தி' பட பாணியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி குறித்தும் அதிரடியான கோரிக்கைகளை முன்வைத்தார்.

விவாதத்தில் பேசிய தளி ராமச்சந்திரன்,"ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும் கொடூரமான கருவியாகவே நீட் தேர்வு உள்ளது. பெரும் அரசியல் பின்புலமும், செல்வாக்கும் உள்ளவர்கள்தான் இன்று நீட் பயிற்சி மையங்களை நடத்தி வருகின்றனர். இந்த நீட் பயிற்சி முகாம்கள் மட்டுமே ஆண்டுக்கு சுமார் ரூ. 1 லட்சம் கோடி வரை இமாலய வருமானம் ஈட்டி வருகின்றன.

நீட் வேண்டாம் என்பதுதான் சிபிஐ (CPI) கட்சியின் உறுதியான நிலைப்பாடு. எனவே, தமிழக மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வில் இருந்து முழுமையான விலக்கு பெற வேண்டும். அதோடு மட்டுமல்லாமல், மருத்துவம் உள்பட எந்தவொரு உயர்கல் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு என்பதே இருக்கக் கூடாது" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

'கத்தி' பட பாணியில் விவசாயிகளின் கடன் தள்ளுபடிக்குக் கோரிக்கை தொடர்ந்து விவசாயிகளின் துயரங்கள் குறித்துப் பேசிய அவர், 'கத்தி' திரைப்படத்தின் காட்சிகளைச் சுட்டிக்காட்டி முதலமைச்சருக்குக் கோரிக்கை விடுத்தார்.

"மக்களின் வாழ்வாதாரமான குடிதண்ணீர் பிரச்சினை, விவசாயத்திற்கான நீர்ப்பற்றாக்குறை மற்றும் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். கூட்டுறவு வங்கிகள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பிரபலமான 'கத்தி' திரைப்படத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயிகள் படும் துயரங்களுக்கு எதிராக நம்முடைய முதலமைச்சர் குரல் கொடுத்திருப்பார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம்; இது வெறும் தேர்தல் வாக்குறுதி அல்ல, நமது உறுதிமொழி' என்று அவர் அறிவித்திருந்தார்.

தற்போது அரசு சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், அது முழுமையான திருப்தியைத் தரவில்லை. எனவே, விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் நிம்மதியடையும் வகையில், இந்தச் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிவதற்குள் அனைத்து விவசாயிகளின் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்களின் சார்பாக இந்த அரையைக் கேட்டுக்கொள்கிறேன்"என்று தளி ராமச்சந்திரன் தனது உரையில் வலியுறுத்தினார்.