சென்னை : டெல்லியில் நீட் தேர்வு குளறுபடிகளைக் கண்டித்துப் போராடிய இளைஞர்களுக்கு ஆதரவு களம் கண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மற்றும் முதலமைச்சர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது "நீட் குளறுபடிகளை எதிர்த்துப் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவளித்த ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அப்பட்டமான ஜனநாயக விரோதச் செயலாகும். ஒன்றிய அரசின் இத்தகைய அடக்குமுறைகள் வ கண்டனத்திற்குரியவை.

டெல்லியில் நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்குத் த.வெ.க. தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது.

நீட் தேர்வுக்கு எதிரான சமரசமற்ற நிலைப்பாடு: மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் நீட் தேர்வு முறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் சமரசமற்ற நிலைப்பாடாகும். இதற்காகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வாக்கு அரசியல் செய்ய மாட்டோம்.

நீட் போன்ற தேர்வுகளை முழுமையாக ஒழிக்க வேண்டுமெனில், கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்; இதுவே இந்தச் சிக்கலுக்கான ஒரே நிரந்தரத் தீர்வாகும்.

மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதில் சட்டச் சிக்கல்கள் இருந்தால், அதனைச் சரி செய்யும் வரை 'சிறப்புப் பொதுப்பட்டியல்' (Special Concurrent List) ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உரிமைகளை மாநில அரசுகளுக்கு முழுமையாக வழங்க வேண்டும். இந்தக் கொள்கையைத் கட்சி தொடங்கிய நாளிலிருந்தே நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

மாணவர்களின் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நீட் தேர்வை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.