சென்னை : இன்று (செப்டம்பர் 22, 2026) நடைபெற்ற அரசு விழாவில், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 'காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை' தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து நெகிழ்ச்சியுடன் உணவு அருந்தினார்.ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்தச் சத்துணவுத் திட்டம் தற்பொழுது நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது அரசுப் பள்ளிப் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் விஜய், மேடையில் நின்று வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், நேரடியாகப் பள்ளி வகுப்பறைக்குச் சென்று அங்கு அமர்ந்திருந்த அரசுப் பள்ளி மாணவர்களுடன் தரையில் சாதாரணமாக அமர்ந்து கலந்துரையாடினார். தவெக அரசின் இந்தச் சிறப்பு விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இன்று காலை உணவாக வழங்கப்பட்ட சுடச்சுட ரவா கிச்சடி மற்றும் சாம்பாரை, மாணவர்களோடு ஒருவராக அமர்ந்து முதலமைச்சர் விஜய்யும் மிகவும் ஆசையாகச் சாப்பிட்டார்.
அப்போது மாணவர்களிடம், "காலை உணவு நல்லா ருசியா இருக்கா தம்பிகளா? தினமும் காலையில சாப்பிடாம பள்ளிக்கு வரக்கூடாது, நல்லா படிச்சுப் பெரிய ஆளா வரணும்" என்று பாசத்தோடு அறிவுரைகளை வழங்கினார்.
முதலமைச்சர் விஜய் தங்களோடு அமர்ந்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற அந்த சந்தோஷத்திலிருந்து மீளாத பள்ளி மாணவர்கள், விழா முடிந்த பிறகு அங்கிருந்த பத்திரிகையாளர்களிடம் தங்களது சுவாரசியமான அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். முதலமைச்சர் விஜய் உங்க பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டாரே.. அவர் உங்ககிட்ட வேற ஏதாவது ஸ்பெஷலா சொன்னாரா தம்பி? என செய்தியாளர் கேட்க மாணவர் நல்ல படிக்கணம்னு சொன்னாரு வேற எதுவுமே சொல்லல என்று மிகவும் எதார்த்தமாகப் பதிலளித்தார்.
மற்றொருவர்"ஆமாங்க.. நல்லா படிக்கணும்னு மட்டும்தான் சொன்னாரு, வேற எதுவுமே சொல்லல" என்று அந்த மழலை மாறாத குரலில் சுருக்கமாகக் கூறி முடித்தார்.முதலமைச்சரைத் தங்களது வாழ்க்கையில் இவ்வளவு அருகில் பார்ப்போம் என்று தாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றும், தினமும் காலையில் தங்களுக்கு இத்தகைய தரமான சத்தான உணவு கிடைக்க வழிசெய்த முதலமைச்சர் விஜய்க்குத் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகள் என்றும் பள்ளிப் பிள்ளைகள் துள்ளிக் குதித்துக் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.