சென்னை : மாநகரப் போக்குவரத்துத் துறைக்குச் சொந்தமான அரசுப் பேருந்து ஒன்றின் வழித்தடப் பலகை விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது. சென்னையில் இயக்கப்பட்ட MTC பேருந்து ஒன்றின் முன்னால் இருந்த வழித்தட விவரப் பலகையில் (Route Board), வழக்கமாகப் பயணிகளுக்கு உதவும் வகையில் பஸ் செல்லும் ஊர்களின் பெயர்களும் வழித்தட எண்களும் இருக்க வேண்டிய இடத்தில், மர்மமான முறையில் 'தக்காளி வெற்றிக் கழகம்' என்று நையாண்டியாக எழுதப்பட்டிருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவியதுடன், பொதுமக்களிடையேயும் நெட்டிசன்கள் மத்தியிலும் பெரும் வைரலானது. அரசுப் பேருந்து ஒன்றில் இதுபோன்று பெயர் மாற்றப்பட்டிருந்தது பலருக்கும் வியப்பையும் சிரிப்பையும் ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் குறித்துப் பொதுமக்களிடையே பல்வேறு விவாதங்கள் எழுந்ததை அடுத்து, MTC (மாநகரப் போக்குவரத்துக் கழகம்) சென்னை நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டுத் தரkவிளக்கம் அளித்துள்ளது. அதில், "சமூக வலைதளங்களில் பரவி வரும் அந்தப் பேருந்தின் வழித்தட விவரப் பலகை, கடந்த சில நாட்களுக்கு முன்பு சில சமூக விரோதிகளாலோ அல்லது மர்ம நபர்களாலோ வேண்டுமென்றே மாற்றப்பட்டுள்ளது.

பேருந்து பணிமனைக்கு வந்த பிறகுதான் இந்தச் செயல் தெரியவந்துள்ளது. இதுகுறித்து உடனடியாகச் சம்பந்தப்பட்ட பணிமனை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தத் தவறான பலகை உடனடியாக அகற்றப்பட்டு, சரியான வழித்தட விவரப் பலகை மாற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்களைக் குழப்பும் வகையிலோ அல்லது பேருந்தின் பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலோ இதுபோன்று இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் எங்கும் நடைபெறாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், தீவிரக் கண்காணிப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன" எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.