பெல்ஜியம் : ஐரோப்பாவின் பல நாடுகள் தற்போது முன்னை போல எப்போதும் இல்லாத அளவுக்கு காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரான்ஸ், ஸ்பெயின், கிரீஸ், போர்ச்சுகல், ருமேனியா உள்ளிட்ட நாடுகளில் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதிகள் தீக்கிரையாகியுள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் எரிந்து சேதமடைந்துள்ளன. பல பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டின் காட்டுத்தீ மற்றும் வெப்ப அலை காரணமாக, ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார இழப்பு €3.1 பில்லியனை (இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.34,052.88) கோடி ஆகும். தாண்டியுள்ளதாக சமீபத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. இது ஐரோப்பிய ஒன்றியம் ஒரு ஆண்டுக்கு சராசரியாக கணக்கிடும் காட்டுத்தீ இழப்பையும் ஏற்கனவே மிஞ்சியுள்ளது.
இந்த அளவுக்கு காட்டுத்தீ ஏன் பரவுகிறது?
கடுமையான வெப்ப அலை : இந்த கோடையில் ஐரோப்பாவின் பல பகுதிகளில் வெப்பநிலை வழக்கத்தை விட மிகவும் அதிகமாக பதிவாகியுள்ளது. நீண்ட நாட்கள் மழை இல்லாததால் காடுகள் வறண்டு போயுள்ளன. இத்தகைய சூழலில் ஒரு சிறிய தீப்பொறி கூட சில நிமிடங்களில் பெரும் காட்டுத்தீயாக மாறுகிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் வெப்ப அலைகள் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
வறட்சி மற்றும் ஈரப்பதம் குறைவு : பல மாதங்களாக போதிய மழை பெய்யாததால் காடுகளில் உள்ள மரங்கள், புதர்கள் மற்றும் புற்கள் முற்றிலும் உலர்ந்துள்ளன. இந்த உலர்ந்த தாவரங்கள் தீ பரவுவதற்கான எரிபொருளாக மாறுகின்றன. இதனால் தீயை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது. தீயும் வேகமாக பல இடங்களிலில் பரவுகிறது.
பலத்த காற்று : காட்டுத்தீ வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று பலத்த காற்று. கிரீஸ், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் வீசிய பலத்த காற்று, தீயை சில மணி நேரங்களிலேயே பல கிலோமீட்டர் தூரம் பரவச் செய்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள் போராடியும் தீயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
அலட்சியம் : காட்டுத்தீ அனைத்தும் இயற்கையாக ஏற்படுவதில்லை. மின்கம்பிகளில் இருந்து பறக்கும் தீப்பொறிகள், அலட்சியமாக எறியப்படும் சிகரெட் துண்டுகள், கட்டுப்பாடின்றி எரிக்கப்படும் குப்பைகள், சில இடங்களில் திட்டமிட்ட தீவைப்புகள் போன்றவையும் காட்டுத்தீக்கு காரணமாகின்றன. கிரீஸில் சமீபத்தில் ஏற்பட்ட சில தீ விபத்துகள் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி, சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
காலநிலை மாற்றத்தின் தாக்கம் : விஞ்ஞானிகள் குறிப்பிடும் மிகப்பெரிய காரணம் இதுதான். உலக வெப்பமயமாதலால் ஐரோப்பாவில் கோடை காலம் நீள்கிறது. அதிக வெப்பம், குறைந்த மழை, நீண்ட வறட்சி ஆகியவை இணைந்து காட்டுத்தீ பரவுவதற்கான சூழலை உருவாக்குகின்றன. ஐரோப்பா, உலக சராசரியை விட வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டங்களில் ஒன்றாக இருப்பதாக ஐரோப்பிய ஆணையமும் எச்சரித்துள்ளது.