சிரியாவில் உள்ள அபு அல்-துஹூர் விமானப்படைத் தளம் மீது இஸ்ரேல் நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்கள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இது குறித்து Axios வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையானது மூத்த அமெரிக்க அதிகாரிகளிடையே கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகத் தெரிகிறது.

அதிபர் அகமது அல்-ஷாராதலைமையிலான புதிய அரசாங்கத்துடன் நல்லுறவை வலுப்படுத்த அமெரிக்க நிர்வாகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வரும் காலகட்டத்தில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. துருக்கி அதிபர் ரெசெப் தையப் எர்டோகனுடன் (Recep Tayyip Erdogan) நெருக்கமான உறவைப் பேணிவரும் டிரம்ப் நிர்வாகம், சிரியாவுடனான தனது உறவை ஒரு வெளியுறவுக் கொள்கை வெற்றியாகப் பார்க்கிறது. துருக்கி அரசாங்கமும் புதிய சிரியத் தலைமைக்கு வலுவான ஆதரவை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

துருக்கிய எல்லைக்கு அருகில் உள்ள இந்த விமானப்படைத் தளத்தின் ஓடுதளங்கள் மற்றும் ஹேங்கர்கள் மீது இஸ்ரேல் குறைந்தது எட்டு குண்டுகளை வீசியுள்ளது. இந்தத் தாக்குதலில் சேதம் ஏற்பட்ட போதிலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. துருக்கியிலிருந்து அதிநவீன ஆயுதங்கள் தளத்திற்கு அனுப்பப்படுவதைத் தடுத்து, அங்கு ராணுவக் குவிப்பைத் தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பில் வெள்ளை மாளிகைக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அலெப்போ அருகே உள்ள தளத்தில் துருக்கியப் படைகளை நிறுத்த அனுமதிப்பதன் மூலம், சிரியா தரப்பு தங்களுக்கு இடையே ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நிலைப்பாட்டை (security status quo) மீற முயன்றதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் குற்றம் சாட்டியது. ஆனால், இஸ்ரேலின் இந்தக் குற்றச்சாட்டைத் துருக்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது. விமானப்படைத் தளத்தில் துருக்கியின் எந்தப் பிரசன்னமும் இல்லை என்றும், அண்டை நாடுகள் மீது தாக்குதல் நடத்தவும் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையைக் குலைக்கவும் இஸ்ரேல் பொய்க் காரணங்களைக் கண்டுபிடித்து வருவதாகவும் துருக்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் எதிர்வினை வழக்கத்திற்கு மாறாகக் கடுமையாக இருந்தது. சிரியா மற்றும் ஈராக்கிற்கான அமெரிக்காவின் சிறப்புத் தூதர் டாம் பாராக் , இந்தத் தாக்குதல்கள் பிராந்திய ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்லாத "தேவையற்ற மோதல் போக்கு" என்று விமர்சித்துள்ளார். மேலும், சிரியா இஸ்ரேலுக்கு எதிராக எத்தகைய விரோதப் போக்கையும் கடைப்பிடிக்கவில்லை என்றும், பதற்றத்தைக் குறைக்கவே அந்நாடு முயன்றதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.