2026 ஆம் ஆண்டுக்கான எஃப்.ஐ.எச் (FIH) ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது அரையிறுதி வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துள்ளது.

நேற்று நடைபெற்ற மிக முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 3-5 என்ற கோல் கணக்கில் பரிதாபமாகத் தோல்வியைத் தழுவியது.

ஆரம்பத்திலேயே அதிர்ச்சி

அரையிறுதிக்குத் தகுதி பெற இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் இந்திய அணி களமிறங்கியது. ஆனால், ஆட்டம் தொடங்கிய 1வது மற்றும் 6வது நிமிடங்களிலேயே அர்ஜென்டினா அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை அடித்து இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி வீரர் சுக்ஜீத் சிங் இரண்டு கோல்களையும், ஹர்திக் சிங் பெனால்டி ஸ்ட்ரோக் மூலம் ஒரு கோலையும் அடித்தனர். எனினும், அர்ஜென்டினா வீரர்கள் அபாரமாக விளையாடி மொத்தம் 5 கோல்களைப் பதிவு செய்து வெற்றியை உறுதி செய்தனர்.

51 ஆண்டு கால காத்திருப்பு

இந்த தோல்வியின் மூலம் ‘பூல் இ’ (Pool E) பிரிவில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்ட இந்திய அணி, உலகக் கோப்பையில் பதக்கம் வெல்லும் வாய்ப்பை முழுமையாக இழந்துள்ளது. இதன் காரணமாக, உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்ற இந்தியாவின் 51 ஆண்டு கால காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது.

அடுத்ததாக இந்திய அணி 7 மற்றும் 8வது இடங்களுக்கான தரவரிசைப் போட்டிகளில் (Classification matches) விளையாடவுள்ளது.