டெல்லி : இந்தியா முழுவதும் பலரும் தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் விரும்பி விளையாட கூடிய ஒரு கேம் என்றால் ‘ஃப்ரீ ஃபயர் மேக்ஸ்’ (Free Fire MAX) என்று சொல்லலாம்.ஆனால், பலரும் இதனை பொழுதுபோக்குக்காக விளையாடாமல் முழு நேரமாக விளையாடி வருகிறார்கள். மேலும் பலர் நள்ளிரவு வரை கண் விழித்து கேம் ஆடி உடலைக் கெடுத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம்.
அப்படி இந்த கேமில் அடிக்ட்டாக இருப்பவர்களுக்கு கரீனா (Garena) நிறுவனம் ஒரு அதிரடி பிரேக்கைக் போடத் தயாராகிவிட்டது. அதன்படி. விளையாட்டில், அடிமையாகும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக "ப்ளே இட் ரைட்" (Play It Right) என்ற அதிரடி திட்டத்தை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் இந்த புதிய விதிகள் நச்சரிப்பு போலல்லாமல், ரொம்பவே கண்டிப்புடன் அமலுக்கு வரவுள்ளன.
ஓடிபி (OTP) தந்தால் மட்டுமே அனுமதி!
இனிமேல் சிறுவர்கள் நினைத்த நேரத்தில் எல்லாம் மொபைலைத் தூக்கிக் கொண்டு கேமிற்குள் நுழைந்துவிட முடியாது. 18 வயதுக்குட்பட்ட ஒவ்வொரு சிறுவனும், கேமை ஓபன் செய்வதற்கு முன்பு கட்டாயமாக OTP சரிபார்ப்பு (OTP Verification) செய்ய வேண்டும். இதன் மூலம், யார் விளையாடுகிறார்கள், அவர்களின் வயது என்ன என்ற துல்லியமான கணக்கு நிறுவனத்தின் கைகளுக்குச் சென்றுவிடும். பெற்றோர்களின் அனுமதியின்றி சிறுவர்கள் கண்மூடித்தனமாக கேமிக்குள் நுழைவதைத் தடுக்க இந்த டபுள் லாக் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
நேரம் ஆச்சு... கிளம்புங்க
"இன்னும் ஒரே ஒரு மேட்ச் பாஸ்..." என்று சொல்லிவிட்டு விடிய விடிய போனை பார்த்துக்கொண்டிருக்கும் ரகமா நீங்கள்? இதோ உங்களுக்கான செக் பாயிண்ட் வந்துவிட்டது. இனி கேம் விளையாடுவதற்கென்றே நேரம் அளந்து கொடுக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்குட்பட்ட குட்டீஸ்கள் மற்றும் டீனேஜர்கள்: இனி நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 3 மணி நேரம் மட்டுமே ஃப்ரீ ஃபயர் மேக்ஸ் விளையாட முடியும்.
18 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள்: உங்களுக்கும் முழுச் சுதந்திரம் கிடையாது. நீங்களும் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் மட்டுமே இந்த கேமிங் உலகத்தில் உலா வரலாம்.
முக்கிய அலர்ட்
இனி 18 வயதுக்குட்பட்ட பயனர்கள் கேமிற்குள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 7,000 வரை மட்டுமே இன்-கேம் பர்ச்சேஸ் செய்ய முடியும். இதற்கு மேல் ஒரு ரூபாய் கூடக் கையை வைக்க முடியாது. இதன் மூலம் பெற்றோர்களின் வங்கிக் கணக்குகள் தப்பியுள்ளன.
ஒரு சின்ன பிரேக் எடுங்க
தொடர்ந்து நாற்காலியிலோ அல்லது கட்டிலிலோ ஒட்டிக் கொண்டு கண் இமைக்காமல் 2 மணி நேரத்திற்கும் மேலாக கேம் ஆடினால், ஸ்கிரீனிலேயே ஒரு வார்னிங் பெல் அடிக்கும். "தொடர்ந்து 2 மணி நேரம் ஆடியாச்சு... போதும், கண்ணுக்கும் மூளைக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுங்க பாஸ்!" என்று சொல்லும் விதமாக ஒரு பிரேக் ரிமைண்டர் (Break Reminder) தட்டி எழுப்பும்.
மொத்தத்தில், கேமிங் அனுபவத்தின் சுவை குறையாமல், அதே நேரத்தில் இளம் தலைமுறையினர் போனுக்கு அடிமையாவதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகப் பாதுகாக்க கரீனா எடுத்துள்ள இந்த அதிரடி முயற்சிக்கு கேமிங் வட்டாரத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.