ரூ.1.40 லட்சத்தில் 200 கி.மீ ரேஞ்ச்! Ampere Xyber எப்போது இந்தியாவில் வரும்?

ஸ்கூட்டர் சந்தையில் கலக்கி வரும் Ampere, இப்போது முதல் எலக்ட்ரிக் பைக்கை களமிறக்கத் தயாராகியுள்ளது.

Hero Image

டெல்லி : இந்தியாவில் பேடன்ட் செய்யப்பட்டுள்ள ஆம்பியர் சைபர் (Ampere Xyber) எலக்ட்ரிக் பைக் மிரட்டலான நேக்கட்-பைக் ஸ்டைல் மற்றும் 200 கிமீ மைலேஜ் ஆப்ஷனுடன் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதன் விலை இந்திய சந்தையில் தோராயமாக ரூ. 1.40 லட்சம் முதல் ரூ. 1.60 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆம்பியர் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் 4 லட்சம் வாகனங்களைக் கடந்து கொடிகட்டிப் பறக்கும் கிரீவ்ஸ் எலக்ட்ரிக் மொபிலிட்டி (Greaves Electric Mobility) நிறுவனத்தின் ஆம்பியர் பிராண்ட், தற்போது முதன்முறையாக எலக்ட்ரிக் பைக் சந்தையில் கால் பதிக்கத் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த பாரத் மொபிலிட்டி எக்ஸ்போ 2025 கண்காட்சியில் ஒரு கான்செப்ட் மாடலாகக் காட்சிப்படுத்தப்பட்ட ஆம்பியரின் முதல் எலக்ட்ரிக் பைக்கான ஆம்பியர் சைபர் (Ampere Xyber), தற்போது இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வடிவமைப்பு பேடன்ட் (Design Patent) செய்யப்பட்டுள்ளது. இந்த பேடன்ட் பதிவு மூலம், ஆம்பியர் நிறுவனம் இந்த பைக்கின் தயாரிப்பு பணிகளை மிக வேகமாகத் தொடர்ந்து வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

வண்டியில் வேற என்ன ஸ்பெஷல் இருக்கு?

ஆம்பியர் சைபர் எலக்ட்ரிக் பைக் சாதாரண ஸ்கூட்டர் போல இல்லாமல், இளைஞர்களைச் சுண்டி இழுக்கும் வகையில் மிகவும் ஆக்ரோஷமான மற்றும் கோண வடிவிலான (Angular) 'நேக்கட்-பைக்' (Naked-bike) ஸ்போர்ட்ஸ் பைக் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சியில் காட்டப்பட்ட அதே மாடர்ன் தோற்றத்தை இந்த பேடன்ட் டிசைனிலும் ஆம்பியர் அப்படியே தக்கவைத்துள்ளது. இதில் பெட்ரோல் டேங்க் இருக்க வேண்டிய இடத்தில் தட்டையான பேனல் கொடுக்கப்பட்டு, அதன் மீது சார்ஜிங் போர்ட் கச்சிதமாக அமைக்கப்பட்டுள்ளது.

வண்டியின் முன்பக்கத்தில் சக்திவாய்ந்த எல்இடி முகப்பு விளக்குகளும், அதன் பின்னால் கார் போன்ற ஹரிசாண்டல் டிஎஃப்டி (TFT) டிஜிட்டல் டிஸ்ப்ளே திரையும் உள்ளன. இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி மற்றும் கூகுள் மேப்ஸ் (Google Maps) நேவிகேஷன் வசதிகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன. வண்டியின் அடிப்பகுதி தட்டாதவாறு முன்பக்கம் யுஎஸ்டி (USD) இன்வெர்ட்டட் போர்க் சஸ்பென்ஷனும், பின்பக்கம் மோனோஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சக்கரங்களிலுமே டிஸ்க் பிரேக் வசதி மற்றும் அகலமான டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் பின்பக்கத்தில் எக்ஸ் (X) வடிவ எல்இடி டெயில்லைட் மற்றும் ஸ்போர்ட்டியான டூ-டயர் சீட் அமைப்பு வண்டிக்கு மாஸ் லுக்கைத் தருகிறது.

இன்ஜின் மற்றும் அசாத்திய பேட்டரி மைலேஜ்

இந்த பைக்கின் செயல்திறன் மற்றும் மைலேஜ் விபரங்கள் இவி பிரியர்களை வியக்க வைக்கும் வகையில் உள்ளன. சாதாரண ஸ்கூட்டர்கள் போல சக்கரத்தில் மோட்டார் இல்லாமல், இதில் பைக்குகள் போன்றே வண்டியின் மையப்பகுதியில் பொருத்தப்பட்ட சக்திவாய்ந்த 10 கிலோவாட் (kW) மிட்-மவுண்ட்டட் எலக்ட்ரிக் மோட்டார் (Mid-mounted motor) பயன்படுத்தப்பட்டுள்ளது. இது சங்கிலித் தொடர் (Chain Drive) மூலமாகப் பின் சக்கரத்திற்குப் பவரை கடத்துகிறது.

இந்த 10kW மோட்டார் என்பது கிட்டத்தட்ட 13.5 குதிரைத்திறனுக்கு (Horsepower) இணையானது என்பதால், சாதாரண சிட்டி இவைகளை விட இது பலமடங்கு கூடுதல் பவர்ஃபுல்லாக இருக்கும்.இதன் பேட்டரி திறனைப் பொறுக்கவரை, நீண்ட ஆயுள் மற்றும் பாதுகாப்பு தரும் எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பேட்டரியை குளிர்ச்சியாக வைத்திருக்க இருபுறமும் ஏர்-இன்டேக் போன்ற லிக்விட் கூலிங் (Liquid Cooling) அமைப்பும் இதில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பேட்டரியை ஒரே ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 200 கிலோமீட்டர் வரை மைலேஜ் (Range) தரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. தினசரி 30 முதல் 40 கிமீ பயணிக்கும் ஒரு வாடிக்கையாளர், வாரத்திற்கு ஒருமுறை சார்ஜ் செய்தால் கூட இந்த வண்டி தாராளமாக உழைக்கும். இருப்பினும், இதன் இறுதி டாப் ஸ்பீடு மற்றும் பேட்டரி கிலோவாட் விபரங்களை நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

இந்தியாவில் எப்போ வரும்?

ஆம்பியர் நிறுவனம் இந்த பைக்கின் பேடன்ட் பணிகளை முடித்து அடுத்த கட்ட வடிவமைப்பு வேலைகளைச் செய்து வருவதால், இந்த ஆம்பியர் சைபர் எலக்ட்ரிக் பைக் வரவிருக்கும் 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது நடுப்பகுதியில் இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.சந்தையில் லான்ச் செய்யப்பட்ட பிறகு இது ரிவோல்ட் (Revolt) மற்றும் ஓபன் (Oben) போன்ற முன்னணி எலக்ட்ரிக் பைக்குகளுக்கு மிகக் கடுமையான போட்டியை ஏற்படுத்தப் போவது உறுதி.

இந்த பைக் தமிழ்நாட்டில் விற்பனைக்கு வந்தவுடன், சென்னை, தூத்துக்குடி, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட அனைத்து முக்கிய நகரங்களில் உள்ள ஆம்பியர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் ஷோரூம்களில் காட்சிக்கு வைக்கப்படும். அங்கேயே நீங்கள் நேரடியாகச் சென்று வண்டியை டெஸ்ட் டிரைவ் செய்து புக் செய்து கொள்ளலாம்.

ரூ.1.40 லட்சத்தில் 200 கி.மீ ரேஞ்ச்! Ampere Xyber எப்போது இந்தியாவில் வரும்?